வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபையில் நாளை (ஜூன் 30) பெரும்பான்மை நிருபிக்க வேண்டும் என கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிவசேனா கட்சி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
![]()
|
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக , அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அசாம் மாநிலத்தில் இருந்த இவர்கள் தற்போது கோவாவில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பா.ஜ. முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நேற்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து சட்டசபையில் பெரும்பான்மை நிருபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா முறையிட்டது.
![]()
|
இதையடுத்து கவர்னர் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சி கொறடா சுனில் பிரபு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை நடந்தது. இதில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டது சரியல்ல, அதுவும் ஒரு நாள் அவகாசம் கொடுத்துள்ளார் கவர்னர். வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா தரப்பு வாதிட்டது. சுனி்ல் பிரபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி ஆஜரானார். கவர்னர் தரப்பில் சாலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.
![]()
|
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, நாளை (ஜூன் 30) மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதன்படி நாளை காலை 11 மணிக்கு சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம். இதில் தகுதி நீக்க வழக்கில் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கலாம். சிவசேனா கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement