காஞ்சியில் மொத்த கொரோனா பாதிப்பு...336!சிகிச்சை பெற்று வந்த முதியவர் திடீர் பலி| Dinamalar

காஞ்சியில் மொத்த கொரோனா பாதிப்பு...336!சிகிச்சை பெற்று வந்த முதியவர் திடீர் பலி

Added : ஜூன் 29, 2022 | |
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, மாவட்டம் முழுதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 336 ஆக உயர்ந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை, கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்தபோது,
காஞ்சியில் மொத்த கொரோனா பாதிப்பு...336!சிகிச்சை பெற்று வந்த முதியவர் திடீர் பலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, மாவட்டம் முழுதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 336 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை, கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்தபோது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியது.


அதன்படி, ஜனவரி 1ம் தேதியன்று மாவட்டம் முழுதும், 35 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பின், ஒரே வாரத்தில் தினசரி பாதிப்பு, 500க்கு மேல் அதிகரித்து வந்தது.இதில், அதிகபட்சமாக ஜன., 16ல், ஒரு நாள் பாதிப்பு, 831 ஆக உயர்ந்தது. அன்றைய நிலவரப்படி மாவட்டம் முழுதும், 4,573 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கியதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

4,310 படுக்கைகள்


தடுப்பூசி மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஜன., இறுதி வாரத்தில், தினசரி பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்தது.பிப்., முதல் வாரத்தில், தினசரி கொரோனா பாதிப்பு மூன்று இலக்க எண்ணில் இருந்த நிலையில், இரண்டாவது வாரத்தில், இரு இலக்கமாக குறைந்தது.மார்ச் மாதம் 4ம் தேதி முதல், மே வரை என, மூன்று மாதங்களாக தினசரி தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகவே இருந்தது வந்தது.இம்மாதம் 5ம் தேதி, 16 என, இரட்டை இலக்கமாக தொற்று உயர்ந்தது.


ஜூன் 8ல் ஒரே நாளில், 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அன்றைய நிலவரப்படி, மாவட்டம் முழுதும், 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.கடந்த, 28 நாட்களில் அதிகபட்சமாக, 25ம் தேதி ஒரே நாளில், 66 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று, 57 பேருக்கு தொற்று ஏற்பட்டு, இம்மாதத்தின் மொத்த பாதிப்பு, 651 ஆக உயர்ந்தது.


இதில், நேற்று முன்தினம் வரை, 352 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள, 299 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுதும், முதல், இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என, 16.07 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மாவட்டம் முழுதும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு படுக்கை, ஐ.சி.யு., ஆக்ஸிஜன் படுக்கை, ஆக்ஸிஜன் இல்லா படுக்கை, சாதாரண படுக்கை என, 4,310 படுக்கைகள் காலியாக உள்ளன.

மூச்சுத்திணறல்


இந்நிலையில், காஞ்சிபுரம் எம்.என்.அவென்யூவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 88, என்பவர், உடல்நல குறைவால் 10 நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 'பாசிட்டிவ்' என தெரிய வந்தது. ஏற்கனவே இதய பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன் உடல் நலத்தில் முன்னேற்றம் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கொரோனா தொற்று மட்டும் இல்லாமல், ராதாகிருஷ்ணனுக்கு இதய பிரச்னையும் இருந்ததால், அவர் இறந்ததாக அரசு மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கடந்த, 21ல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதிப்பது, பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாக புகார் எழுந்துள்ளது.


கடந்த, 10 நாட்களில் கொரோனா விதிமீறல் தொடர்பாக மாவட்டம் முழுதும் எவ்வளவு அபராத தொகை வசூலிக்கப்பட்டது என மாவட்ட நிர்வாககத்திடம் கேட்டபோது, அபராதம் தொடர்பான விபரங்களை அளிப்பதற்கு கூட மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. தினசரி, 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டாலும், பொதுமக்கள் கொரோனா அச்சமின்றி முக கசவம் அணியாமல் பொது இடங்களில் உலாவுவதை காண முடிகிறது.மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X