வேளச்சேரி, வேளச்சேரி விரைவு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, மூடு கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேளச்சேரியில், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால், இப்பகுதியில் மக்கள் நெருக்கடியும், வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வாகன நெரிசலை தடுக்க, விஜய நகர் சந்திப்பில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டு, ஒரு அடுக்கு பாலம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது.வேளச்சேரி விரைவு சாலையை ஒட்டி, 15 அடி அகல கால்வாய் உள்ளது. இதை, மூடு கால்வாயாக மாற்றி, விரைவு சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.இதற்கான பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய நிலையில், தற்போது, 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அதன் மீது, தார் சாலை அமைத்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.அதில் ஓர் இடத்தில், மூடு கால்வாய்க்கும், சாலைக்கும் இடையே, கழிவு நீர் வெளியேற்று நிலையம் உள்ளது. இதர பகுதியில் சாலை அகலமாகவும், அந்த இடத்தில் குறுகலாகவும் உள்ளதால், வாகன நெரிசல் மூச்சு முட்டும் அளவுக்கு அதிகரிக்கிறது.அதே இடத்தில், மூடு கால்வாய் மீது இரும்பு தடுப்பு அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால், மூடு கால்வாய் மீது சாலை அமைத்து, வாகன நெரிசலை குறைக்க முடியாமல் நெடுஞ்சாலைத்துறை திணறுகிறது.ஆக்கிரமிப்பில், சில அரசியல் கட்சியினர் தலையீடு இருப்பதால், அதிரடி நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி உள்ளனர். கழிவு நீர் வெளியேற்று நிலையத்தை இடம் மாற்றி அமைக்கும் வரை, வாகன நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். மூடு கால்வாய் மீது சாலை அமைத்தால், நெரிசல் கணிசமாக குறையும்.அரசியல் தலையீடு இல்லாமல், மூடு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.