பெங்களூரு : முதல்வர் வேட்பாளர் பதவி மீது கண் வைத்துள்ள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஆதரவாளர்கள் மூலம், தன் பிறந்த நாளை மாநிலம் முழுதும், 'சித்தராமோற்சவம்' என்ற பெயரில் ஒரு மாதம் காலம் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.
காங்கிரசை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு ஆக்ஸ்ட் 3ல் 74 வயது நிரம்புகிறது. அவரது பிறந்த நாளை, பிரமாண்டமான முறையில் கொண்டாட ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர் .இது குறித்து, முன்னாள் அமைச்சர் மஹாதேவப்பா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:

சித்தராமையா மக்கள் தலைவர். அவருக்கென்று தனி ஆதரவு பட்டாளமே உண்டு. என்றுமே அவர் பிறந்த நாள் விழா கொண்டாடவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. ஆனால், அவரது பிறந்த நாளை மாநிலம் முழுதும் ஒரு மாத காலம், 'சித்தராமோற்சவம்' என்ற பெயரில் கொண்டாடவுள்ளோம். இதற்கு அவரிடம் ஒப்புதல் பெறப்படும்.விழாவுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி விட்டன. முதல்வராக செய்த பணிகளை மக்கள் இன்றும் நினைக்கின்றனர். இது தேர்தல் ஆண்டு என்பதால், அவர் கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடம் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தாவணகெரேவில் பிரமாண்ட விழா நடத்துவும் ஆலோசிக்கப்படுகிறது. திரளான ஆதரவாளர்களை திரட்டி, கர்நாடகாவின் மத்திய பகுதியிலும் தனக்கு செல்வாக்கு இருப்பதாக, காங்கிரஸ் மேலிடத்துக்கு காண்பிப்பது சித்தராமையாவின் கணக்கு.இதன் மூலம் முதல்வர் வேட்பாளர் பதவி மீது கண் வைத்து, தேர்தல் வேளையில் தன் தலைமையில் தான் அனைத்தும் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்.