பாட்னா:பீஹாரில், ஓவைசியின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள், ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்ததையடுத்து, சட்டசபையில் அது தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை மீண்டும் பெற்றுஉள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், ௭௫ தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதாதளமும், 74 இடங்களில் பா.ஜ.,வும், 43 இடங்களில் ஐக்கிய ஜனதாதளமும் வென்றன.இதன்பின், விகாஷீல் இன்சான் கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேர்ந்தனர்.
இதையடுத்து, பா.ஜ., 77 எம்.எல்.ஏ.,க்களுடன், சட்டசபையில் தனிப்பெரும் கட்சியானது. இதற்கிடையே, மாநிலத்தில், ஒரு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால், ஆர்.ஜே.டி., யின் பலம் ௭௬ ஆக உயர்ந்தது. இந்நிலையில், அசாதுதீன் ஓவைசியின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களில் நால்வர் ஆர்.ஜே.டி.,யில் நேற்று இணைந்தனர். இதனால், சட்டசபையில் ஆர்.ஜே.டி.,யின் பலம் ௮௦ ஆக உயர்ந்ததை யடுத்து, தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை, அக்கட்சி மீண்டும் பெற்று உள்ளது.