நுரையீரல் பாதிப்பால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், 48, சிகிச்சை பலனின்றி இறந்தார். புறாக்கள் எச்சம் கலந்த காற்றை, பல ஆண்டுகளாக சுவாசித்ததன் விளைவாக, அவரது நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, விருதுநகர் மருத்துவ கல்லுாரி நுரையீரல் சிகிச்சை பிரிவு பேராசிரியர் தீபக் கண்ணா கோதண்டராமன் கூறியதாவது:பெங்களூரில், வித்யாசாகர் வசித்த வீட்டுக்கு அருகில் ஏராளமான புறாக்கள் வளர்க்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசிக்கும் போது, நுரையீரலில் தொற்று ஏற்பட்டு, மொத்த நுரையீரலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.
அப்படி பாதிக்கப்பட்டு தான் வித்யாசாகர் மருத்துவ சிகிச்சைக்கு சென்றுள்ளார். நுரையீரல் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. அதையடுத்தே, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவர்கள் முடிவு எடுத்துள்ளனர். மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் பெற்று, வித்யாசாகருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து நுரையீரல் கிடைப்பது தாமதமானது. அதனால், மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல், சிகிச்சையை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தான், பாதிப்பு அதிகமாகி வித்யாசாகர் இறந்துள்ளார். இது, மருத்துவ வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல். புறாக்களால் அப்படிப்பட்ட ஆபத்து வர வாய்ப்புண்டு. ஒரு இடத்தில் புறாக்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு, அவற்றின் எச்சமும் அதிகமாக இருந்து, எச்சம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் போது, நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இது ஒரே நாளில் ஏற்பட்டு விடாது. சிறிது சிறிதாக தான் நுரையீரலை பாதிப்படைய செய்யும். ஒரு கட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து, மூச்சு திணறல் ஏற்படும். அப்போது தான், மருத்துவர்களை சந்திப்பர். மருத்துவர்களும், இது தான் பிரச்னை என்று கண்டறிந்து விட்டால், பெரிய பிரச்னை ஏற்படும் முன், பாதிப்புக்குள்ளானவரை காப்பாற்ற முடியும்.
மூச்சு திணறலுக்கு பிறகும் தொடர் அலட்சியம் காட்டினால், பாதிப்பு அதிகமாகி, மரணம் வரை இட்டு செல்லும். நுரையீரல் பாதிக்கப்பட்டு வருவோருக்கு, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பொறுத்து, ஒரு பக்கமோ அல்லது இரு பக்கமோ, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு சரியான நுரையீரல் கிடைக்க வேண்டும். அதில் தான் சிக்கல் உள்ளது. மற்றபடி, நுரையீரல் தானம் பெறுவதில் வயது வித்தியாசம் இல்லை.
இந்த பிரச்னை புறாக்களால் மட்டும் ஏற்படுவதில்லை. 'லவ் பேர்ட்ஸ்' உள்ளிட்ட பறைவகளின் எச்சம் வாயிலாகவும் ஏற்படும். அதனால், வீட்டில் பறவைகளை வளர்ப்போர், கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற உயிரினங்கள் உதிர்க்கும் ரோமம், காற்றில் பரவி, சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் சென்று விடும்.
அதன் வாயிலாக, நுரையீரலுக்குள் தொற்று ஏற்படும். எனவே, வளர்ப்பு பிராணிகள் விஷயத்திலும் கவனம் தேவை. எல்லாருக்கும் இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால், இவற்றால் நிச்சயம் பாதிப்பு உண்டு என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - -