உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும்' என்று, தமிழக பா.ஜ., தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க, திராவிட மாடலே சிறந்த வழி என்று, சிந்தித்து இருக்கின்றனர் போலும்; அது தான் இந்த கோரிக்கை.
'கட்டடங்களுக்கோ, சாலைகளுக்கோ, ரயில் நிலையங்களுக்கோ, அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டி விட்டால், கட்சி தானாக வளர்ந்து விடும்; பிரபலமாகி விடும். மக்கள் அனைவரும் அணி திரண்டு வந்து, கட்சியில் ஐக்கியமாகி விடுவர்' என்று, கருதுவது திராவிட கட்சிகளின் கலாசாரம். அதனால் தான், நம் மாநிலத்தில், பல கட்டடங்களுக்கும், சாலைகளுக்கும், ஈ.வெ.ரா., மற்றும் தி.மு.க., பிரமுகர்களின் பெயர்களை சூட்டி குதுாகலித்து இருக்கின்றனர்.
சென்னையில், மவுன்ட் ரோட்டின் பெயரை, அண்ணா சாலை என, தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 1968லேயே மாற்றி விட்டனர். பெயரை மாற்றி, 54 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும், 90 சதவீத மக்கள் இன்னமும், மவுன்ட் ரோடு, மவுன்ட் ரோடு என்றே, கூறிக் கொண்டிருக்கின்றனரே தவிர, அண்ணா சாலை என்று கூறுவதில்லை.
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு, ஜீவா என்று பெயர் சூட்டிய போது எதிர்ப்பு கிளம்பியதால், வேறு வழியின்றி, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் என்று மாற்றினர். இன்றளவும், அந்த ஸ்டேஷனுக்கு செல்ல டிக்கெட் எடுப்பவர்கள், வியாசர்பாடி என்று கூறி தான் டிக்கெட் எடுக்கின்றனரே அன்றி, 'வியாசர்பாடி ஜீவா' என்று கூறி டிக்கெட் வாங்குவதாக தெரியவில்லை.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, சென்னையில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம்' என்று நாமகரணம் சூட்டி விட்டுச் சென்றார். ரயில்வே அச்சிட்டு கொடுக்கும் டிக்கெட்டுகளில் மட்டும் தான், அந்தப் பெயர் இருக்கிறதே தவிர, மக்களுக்கு இன்று நேற்றல்ல என்றைக்கும் அது, சென்ட்ரல் ஸ்டேஷன் தான்.
மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களை சூட்டி, ஒன்றிரண்டு ஆண்டுகளில், அந்தப் பெயர்கள் வெற்றிகரமாக வாபஸ் வாங்கிய வரலாறும் தமிழகத்திற்கு உண்டு. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர சாலையில் பயணிக்கும் போதே நினைவில் நிழலாடும். மறு சீரமைக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையத்துக்கு, வாஜ்பாய் பெயரை சூட்டித்தான் அவரை நினைவு கூர வேண்டும் என்பதில்லை. அப்படியே சூட்டினாலும் மக்கள், எழும்பூர் என்று தான் கூறுவரே தவிர, வாஜ்பாய் ஸ்டேஷன் என்று சொல்ல மாட்டார்கள்.
பகுத்தறிவு... பகுத்தறிவு... என்று சொல்லி, பகல் வேஷம் போட்டபடி, பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையே செய்து கொண்டிருக்கும் கழகங்களை போல, பா.ஜ.,வினரும் சிந்திக்காமல், கொஞ்சம் சிந்தனையை சீர் துாக்கி, உண்மையான பகுத்தறிவோடு செயல்பட்டு, கட்சியை வளர்க்க முற்பட வேண்டும். வேண்டாம் திராவிட ஆட்சியாளர்களின் பாணி!