புறா எனும் அழகிய பறவை இத்தனை நாளும் அமைதியின் சின்னமாக, மனதிற்கினியதாகவே இருந்து வந்தது. ஆனால், இன்றோ அதன் மேல் ஒரு இனம் புரியாத அச்சம் தோன்றியுள்ளது. புறா மட்டுமல்ல லவ் பேர்ட்ஸ், பூனை, நாய் என செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பலரும் பெரும் குழுப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் ஒற்றை மரணம் நம் வளர்ப்புப் பிராணிகள் மீதான அத்துனை காதலையும் சுக்குநூறாய் உடைத்துப் போட்டிருக்கிறது.
ஆம், நாம் செல்லமாய் வளர்ப்பவைகளால் நம் உடல் நலனுக்கே பிரச்னையென்றால் அவற்றை வெறுத்து ஓதுக்கவோ, துறக்கவோ முடியாமல் பலரது பேச்சில் துயரம் தெரிகிறது. புறா வளர்ப்பை ஒரு பிசினஸாக செய்து கொண்டிருந்தவர்கள் கூட என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பது தெரிகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்...
புறா எச்சம் எல்லது கழிவுகள் என்ன செய்யும்?
![]()
|
நுரையீரல் செயலிழப்புக்கு புகைப்பிடிப்பது, காற்று மாசு போன்ற எண்ணற்ற காரணங்கள் உள்ளன. அது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் உண்டு. ஆனால் அதிகம் விழிப்புணர்வு இல்லாத அதே சமயம் நுரையீரல் செயலிழப்புக்கு வித்திடும் காரணியாக புறா எச்சம் உள்ளது. மறைந்த மீனாவின் கணவருக்கு பல்வேறு உடல் பாதிப்புகளுடன் நுரையீரல் செயலிழப்பும் இருந்துள்ளது. அதற்கு அவர் வீட்டருகே கூட்டமாக வந்து செல்லும் புறாக்களின் எச்சங்களும் காரணம் என்கின்றனர்.
ஏன் ஆபத்து?
![]() Advertisement
|
இது பற்றி ஐதராபாத்தின் பிரபல நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் விஜய்குமார் ஒரு பேட்டியில் “புறாக்களின் எச்சம் சுவாசம் மூலம் பூஞ்சை தொற்றை ஏற்படுத்தக் கூடும். தொட வேண்டும் என்றில்லை காற்றின் மூலமாகவே எச்சங்களின் துகள்கள் பரவி பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் ஒருவருக்கு நுரையீரல் வீக்கம் ஏற்படும். இதற்கு பெயர் தான் ஹைப்பர்சென்சிடிவ் நிமோனிட்டிஸ் (எச்.பி.,)." என்றார்.
![]()
|
மேலும் “பல மருத்துவர்கள் இதை வைரல் அல்லது வித்தியாசமான நிமோனியா என்று குழப்பிக்கொள்கிறார்கள். இது போன்ற பாதிப்புடன் வருபவர்களை கண்டறிய சந்தேகத்தின் பேரில் புறா வளர்க்கிறீர்களா அல்லது புறாக்கள் வீட்டருகே வந்து செல்கின்றனவா என்று கேட்டுக்கொள்வேன். நகரங்களில் புறாக்களின் எச்சம் மற்றும் ஏசி குழாய்களில் காணப்படும் பூஞ்சைகள் சேர்ந்து மோசமான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.” என எச்சரிக்கிறார்.
நுரையீரல் திசுக்களில் வீக்கம்!
![]()
|
புறா எச்சத்திலுள்ள பூஞ்சைகள் உள்ளே சென்று நுரையீரல் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் சுவாசிப்பதை கடினமாக்கும். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் மீளமுடியாத நுரையீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது. புறா எச்சத்தை தவிர, வீட்டில் பிற பறவைகள் வளர்ப்பவர்கள், சுத்தமில்லாத ஏசி, மாடு வளர்ப்பவர்கள், மாவு அல்லது தானிய மூட்டைகளை கையாள்பவர், பேப்பர், பிளாஸ்டிக், பெயின்ட் துறைகளில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
இதன் அறிகுறிகள்
மூச்சுத் திணறல், வறட்டு இருமல், இறுக்கமான மார்பு, சோர்வு, காய்ச்சல் ஆகியவை ஹைப்பர்சென்சிடிவ் நிமோனிட்டிசின் (எச்.பி.,) அறிகுறிகள். இதுவே தீவிரமடைந்திருந்தால் எந்த வேலை செய்தாலும் மூச்சுத் திணறல் உண்டாகும். இருமல், சோர்வுடன், உடல் எடை இழப்பும் இருக்கும்.
![]()
|
அரிதாக சிலருக்கு திசுக்களில் நுரையீரல் திசுக்களில் குணப்படுத்த முடியாத வடுக்களை ஏற்படுத்தி விடும். இதனை நுரையீரல் பைப்ரோசிஸ் என்கின்றனர். இழைகள் போன்று வளர்ந்து திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்வதை குறைக்கும். இதன் அறிகுறியாக கை மற்றும் கால்களின் விரல் முனைகள் பெருத்து காணப்படும். நகங்கள் வளைந்து கீழ் நோக்கி இருக்கும்.
சிகிச்சை முறைகள்
நுரையீரல் திசு வீக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். திசு வீக்கத்தை உண்டு பண்ணும் பொருளை கண்டறிவது சிகிச்சையின் முதல் படி. பின்னர் அதனை நீக்க வேண்டும். தீவிர நுரையீரல் திசு வீக்கம் கொண்டவர்களுக்கு நோயை உண்டாக்கிய பொருளை நீக்கிய பின்னரும் பிரச்னை நீடிக்கும்.
![]()
|
அவர்கள் பாதிக்கப்பட்ட திசுக்கள் பழைய நிலைமைக்கு திரும்ப வீக்கத்திற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். வேலை மற்றும் வீட்டு சூழலை முடிந்தால் மாற்றியமைக்க வேண்டும். இது தவிர நுரையீரலை புத்துணர்வாக்கும் பயிற்சிகளை கற்றுத்தருவர். அவை எதுவும் பலனளிக்காத நிலையில் இருப்பவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.
புறவைகளை நெருங்காதீர்கள்!
ஹைப்பர்சென்சிடிவ் நிமோனிட்டிஸ் ஏற்பட 150 காரணங்கள் இருந்தாலும், புறாக்களின் எச்சம் முதன்மை காரணமாக உள்ளது. பிற செல்லப் பறவைகளும் இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே புறாக்கள், பறவைகள் வளர்ப்பவர்கள் அதனுடன் அதிக நெருக்கம் காட்டதீர்கள். அதன் கழிவுகளை சுத்தம் செய்யும் போது என்95 முகக்கவசம் அணிவது அவசியம்.
![]()
|
கழிவுகளை ஒரு கவரில் சுற்றி அவை வெளியே பரவாத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். அதே கைகளுடன் சாப்பிடுவது, முகத்தை தொடுவது போன்றவற்றை செய்ய கூடாது. சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கேன்சர், எச்.ஐ.வி., கோவிட் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் புறாக்களை நெருங்கவே கூடாது.