வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்போரூர் : ''மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை ஏற்படுத்துவதே முக்கியம்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த காயாரில், வி.ஐ.எஸ்., எனும் 'வேலுார் இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பெயரில் பள்ளி, 35 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியின் திறப்பு விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி., கல்வி குழும நிறுவனரும், வேந்தருமான விஸ்வநாதன் தலைமை வகித்தார். வி.ஐ.எஸ்., பள்ளியின் தலைவர் செல்வம் வரவேற்றார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பள்ளியை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.துணை ஜனாதிபதி பேசியதாவது: இந்தியா, பண்டைய காலங்களிலிருந்து அறிவின் பொக்கிஷமாகவும், கல்வியில் சிறந்து விளங்கும் தொட்டிலாகவும் இருந்தது. குருகுல அமைப்பில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் பங்களிப்பு
ஒரு தனி நபரின் முழுமையான வளர்ச்சியை வெளிக் கொணர, அறிவு மற்றும் திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. அறிவியல், கணிதம், தத்துவம், மருத்துவம், வானியல் மற்றும் பிற துறைகளில், உலகிற்கு ஏராளமான பங்களிப்பை, இந்தியா செய்துள்ளது. நம் தாய்மொழியை சுதந்திரமாகவும் பெருமையாகவும் பேசும்போது தான், நம் கலாசார பாரம்பரியத்தை, உண்மையாக மதிக்க முடியும்.

முடிந்தவரை, பல மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தாய் மொழியில் வலுவான அடித்தளம் இருக்க வேண்டும். பல மொழி பேசுவது, குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.கல்வி என்ற பெயரில், மாணவர்களை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் கட்டுப்படுத்துவது நவீன, போட்டி நிறைந்த கல்வியின் சாபக்கேடு. அவர்கள் வெளி உலகத்தை அனுபவிக்க வேண்டும்.
சேவை மனப்பான்மை
இயற்கையின் மடியில் நேரத்தை செலவிட வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவுகளுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். பல்வேறு கைவினைகளையும், வர்த்தகங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். கள நடவடிக்கைகள், சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக சேவை ஆகியவற்றை, வகுப்பறை நிகழ்ச்சிகளில் சேர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
வீடு என்பது அன்பையும், பண்பாட்டையும் உள்ளடக்கியது. பள்ளி என்பது அறிவையும், ஆற்றலையும் உள்ளடக்கியது. அத்தகைய அன்பையும், பண்பாட்டையும், அறிவையும், ஆற்றலையும் கற்றுத் தருவதாக இப்பள்ளி அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், வி.ஐ.டி., கல்வி குழும துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.