கோவை : கோவையை சேர்ந்த நூர்முகமது என்பவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை மாவட்டம், சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நுார்முகமது; கார் வாங்கி, விற்பது; வீடு, சிறு சரக்கு வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தேர்தலில் போட்டியிடுவதை வழக்க மாக கொண்டுள்ளார். கடந்த, 1996-ல் சட்ட சபை, லோக்சபா தேர்தல்களில் களமிறங்கினார். தொடர்ந்து, அப்போதைய குறிச்சி பேரூராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆளும் கட்சியான தி.மு.க., வேட்பாளரை தோற்கடித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து, ஆண்டிபட்டி, ஆர்.கே.நகர் தேர்தல்களில் போட்டியிட்டார். சாத்தான்குளம், திருச்சி - 2, வாணியம்பாடி, திருமங்கலம் சட்ட சபை தொகுதிகள், வேலுார் லோக்சபா தொகுதி என, 30 முறை தேர்தல் களம் கண்டுள்ளார். தற்போது ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார்.
நுார்முகமது கூறியதாவது: மக்கள் தங்கள் ஓட்டின் வலிமையை உணராமல் பணம் பெற்று ஒட்டு போடுகின்றனர். இச்செயலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதேபோல், ஓட்டு போடாதவர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும். நமது ஓட்டின் வலிமையை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தவே, ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.