சென்னை: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை, 'எண்ணும் எழுத்தும்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு செய்திக் குறிப்பு:கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு, கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வியாண்டில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான, மாணவ - மாணவியருக்காக, 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.வரும் 2022 - 23ம் கல்வியாண்டில் துவங்க உள்ள, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு, 2025ல் எட்டு வயதுக்குட்பட்ட, அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்தறிவும், எண்ணறிவும் கிடைத்து விட வேண்டும் என்பது தான்.
அதற்கேற்ப, ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படும். செயல் வழியிலும், விளையாட்டு வழியிலும், குழந்தைகள் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து, அவர்களை குழுக்களாக பிரித்து, பாடங்களை கற்றுத் தருவதே இதன் அடிப்படை. குழந்தைகளின் கல்வியை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மகிழ்ச்சியான கல்விச் சூழலை உருவாக்கவும், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.