வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கேட்டுக் கொண்டதால் தான் 2017-ல் பழனிசாமியுடன் இணைந்தேன். எனவே, அவர்கள் இருவரும் கைவிட மாட்டார்கள்' என, ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நம்பிக்கை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை தலைமையை நீக்கி விட்டு, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலராக்க, அவரது ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அ.தி.மு.க.,வில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரி ஜெயலலிதாவும், ஜானகியும் யுத்தம் நடத்த 1988-ல் கட்சியின் பெயரும், சின்னமும் முடக்கப்பட்டது.
கடந்த, 1989 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது. 27 எம்.எல்.ஏ.,க்களுடன், 22.37 சதவீத ஓட்டுகளை பெற்று, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை, ஜெயலலிதா பெற்றார். அதன் பின்னரே, அ.தி.மு.க., அவரிடம் வந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், பன்னீர்செல்வம் -- சசிகலா என மாறிய யுத்தம், சில மாதங்களிலேயே, பழனிசாமி -- பன்னீர்செல்வம் என திரும்பியது.

அதிக எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுடன் ஆட்சி அதிகாரம் இருந்தும், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பால், அ.தி.மு.க., கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துதான், பழனிசாமி -- பன்னீர்செல்வம் இணைந்தனர். பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என, இரட்டைத் தலைமையின் கீழ் கட்சி வந்தது.
கடந்த 2017 போலவே, இப்போதும் பழனிசாமி பக்கமே பெரும்பாலான நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.ஆனாலும், பழனிசாமியால், பொதுச்செயலராகி, கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது என்பதில், பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 'பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கேட்டுக் கொண்டதால்தான், பழனிசாமியுடன் இணைந்தேன். எனவே, மோடியும், அமித்ஷாவும் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
'பழனிசாமி வசம் அ.தி.மு.க., சென்று விட்டால் என்ன நடக்கும் என்பது, பா.ஜ., தலைமைக்கு நன்றாகவே தெரியும். 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு கிடைத்த, 75 எம்.எல்.ஏ.,க்கள், இரட்டை தலைமைக்கு கிடைத்த வெற்றி. 'பழனிசாமி கட்சியை கைப்பற்றும் முயற்சியை தொடர்ந்தால், 2017 போலவே, இரட்டை இலை சின்னம் இல்லாமல் போய் விடும்' என, தன் ஆதரவாளர்களுக்கு பன்னீர்செல்வம் நம்பிக்கை அளித்து வருவதாக தெரிகிறது.
பொதுச்செயலருக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர்,- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியபோது, கட்சி விதிகளில் செய்யப்பட்ட பல திருத்தங்கள், பழனிசாமிக்கு எதிராக உள்ளதாக, தன் ஆதரவாளர்களிடம் பன்னீர்செல்வம் கூறி வருகிறார். வடக்கு, மேற்கு மாவட்டங்கள் தவிர்த்த, மற்ற பகுதிகளில் உள்ள மாவட்ட செயலர்களிடம், ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்தவற்றை எடுத்துச் சொல்லி, பன்னீர்செல்வம் ஆதரவு திரட்டி வருவதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.