இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: கணவரின் காம லீலைக்கு உதவி; மனைவிக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: கணவரின் காம லீலைக்கு உதவி; மனைவிக்கு 20 ஆண்டு சிறை

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (3) | |
இந்திய நிகழ்வுகள்ரூ 29 லட்சம் மோசடி: மேலாளர் கைதுமுசாபர்நகர்-உத்தர பிரதேசத்தில், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து போலி 'செக்' வாயிலாக 29 லட்சம் ரூபாயை சுருட்டிய வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடாலி நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளராக, அனிருத் குமார்
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்
ரூ 29 லட்சம் மோசடி: மேலாளர் கைதுமுசாபர்நகர்-உத்தர பிரதேசத்தில், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து போலி 'செக்' வாயிலாக 29 லட்சம் ரூபாயை சுருட்டிய வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடாலி நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளராக, அனிருத் குமார் சமீபத்தில் மாற்றலாகி வந்தார். இந்நிலையில் நேற்று அனிருத் குமாரை போலீசார் கைது செய்தனர். அனிருத் குமார் பக்பட் கிளையில் மேலாளராக இருந்தபோது, போலி செக் வாயிலாக வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, 29 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து எடுத்துள்ளார். இது குறித்து வாடிக்கையாளர் தந்த புகாரின் பேரில் அனிருத் குமார் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் உடந்தையாக இருந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1


0 வயது சிறுவன் தெருநாய்கள் கடித்து பலிகுருஷேத்ரா-ஹரியானாவில், மரத்தடியில் துாங்கிக் கொண்டிருந்த, 10 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் அவன் உயிரிழந்தான். ஹரியானாவின் குருஷேத்ராவில் உள்ள சனர்தால் கிராமத்தை சேர்ந்தவர் சந்தர்பால். விவசாய கூலியான இவர், தன் மனைவியுடன் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரது மகள் அஞ்சலி மற்றும் 10 வயதான மகன் அமன் ஆகியோர் மரத்தில் இருந்து பழம் பறித்து சாப்பிட சென்றனர். பழம் சாப்பிட்ட பின், மகள் அஞ்சலி திரும்பிவிட்டார். மகன் அமன் மட்டும் மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டான். அப்போது அவனை சூழ்ந்த தெரு நாய்கள் கடித்து குதறின. இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான்.


உ.பி., மற்றும் சத்தீஸ்கரில்மின்னலுக்கு 20 பேர் பலிபதேபுர்-உத்தர பிரதேசத்தின் பலியா மற்றும் பதேபுர் மாவட்டங்களில் நேற்று ஒரு நாளில், மின்னல் தாக்கி, 10 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களில் மின்னல் தாக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பலியா மாவட்டத்தில், நேற்று வெவ்வேறு இடங்களில், மின்னல் தாக்கி, நான்கு பேர் உயிரிழந்தனர். அதேபோல் பதேபுரில், ஆறு பேர் உயிரிழந்தனர்.நேற்று முன்தினம் மஹராஜ்கஞ்ச், சுல்தான்புர், பதோஹியில், ஏழு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும், மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 17ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே சத்தீஸ்கரின் ஜோஷ்புர் மாவட்டத்தின் சன்னா கிராமத்தில் வாராந்திர சந்தை நேற்று நடந்தது. அப்போது திடீரென மழை பெய்ததால், ஒரு மரத்தின் கீழ் மக்கள் தஞ்சமடைந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில், மூன்று பேர் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்தனர்.


தமிழக நிகழ்வுகள்
எலெக்ட்ரிக் கடையில் தீவிபத்துராஜபாளையம்,: ராஜபாளையத்தில் நேற்று அதிகாலை எலக்ட்ரிக் கடையில் நடந்த தீ விபத்தில் தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர்.ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசும்பொன். புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் பெரியாதிகுளம் கண்மாய் அருகே எலக்ட்ரிக் பொருட்கள் கடை வைத்துள்ளார்.நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் பூட்டிய கடைக்குள் ஏற்பட்ட தீ தரைதளத்திலிருந்த அனைத்து பொருட்களுக்கும் பரவி பற்றி எரிந்தது.மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஜே.சி.பி இயந்திரத்தினால் முன்பக்க ஷட்டரை உடைத்து 4:00 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news
திருட்டு நகை மீட்பு: ஒருவர் கைதுஸ்ரீவில்லிபுத்துார் : சிவகாசியை சேர்ந்தவர் சுஜிதா, 32. இவர் தமிழ் புத்தாண்டன்று (ஏப்ரல் 14) திருவண்ணாமலை ஸ்ரீனவாச பெருமாள் கோயிலில் ராமர் படத்திற்கு முன்பு அலைபேசியில் செல்பி எடுத்து விட்டு, 15 பவுன் நகைகள் இருந்த தனது கைப்பையை அதே இடத்தில் மறந்து விட்டு சென்றார்.ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு எஸ். ஐ. ஆறுமுகசாமி தலைமையிலான போலீசார் விசாரணையில் தென்காசி பாண்டியராஜபுரத்தை சேர்ந்த செல்வமாரி, 38, அந்த கைப்பையை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, நகைகளை குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர்.


ஆலமரம் விழுந்ததில் சிறுமி உட்பட 4 பேர் காயம்விழுப்புரம் : பழமையான ஆலமரம் விழுந்ததில் சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

கிளியனுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டு, புத்து மாரியம்மன் கோவில் அருகே கீழ்புத்துப்பட்டு செல்லும் சாலையில் பழமையான ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரம் நேற்று மாலை திடீரென அங்கிருந்த பெட்டிக்கடை மீது அடியோடு விழுந்தது.இதில், சாலையில் சென்ற கொடூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 47; கிருஷ்ணன், 35; ஒழிந்தியாம்பட்டு கென்னடி மகள் ஆர்த்தி, 10; மற்றும் ஆறுமுகம் மனைவி துலுக்காணம், 58; ஆகியோர் காயமடைந்தனர். உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தகவலறிந்த கிளியனுார் போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆலமரத்தை அகற்றினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


விழுப்புரம் நகராட்சியில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் எம்.ஜி., ரோடு மற்றும் பாகர்ஷா வீதி கடைகளில் நகராட்சி அலுவலர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப், உணவு சாப்பிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முள் கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ் உள்ளிட்ட 2 டன் எடையுள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.இதில், 2 கடைகளுக்கு தலா 1,000 ரூபாயும், ஒரு கடைக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதித்தனர். இதையடுத்து, விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிக்கன் கடையில் இருந்து கோழி கழிவுகளை பாப்பான்குளம் குடியிருப்புகளுக்கு அருகில் கொட்டியதாக புகார் வந்தது. அங்கு சென்ற அலுவலர்கள், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதற்காக சிக்கன் கடை உரிமையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


பைக் மோதி தொழிலாளி பலிதிண்டிவனம் : திண்டிவனம், கொள்ளார் பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி, 47; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில், திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த பைக், ராஜாமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரயில் மோதி ஒருவர் பலி

சின்னசேலம் : சின்னசேலம் அருகே ரயில் மோதி ஒருவர் இறந்தார்.சின்னசேலம் அடுத்த பெத்தானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 45; இவர், விடுதியில் தங்கி பிளஸ் 2 படிக்கும் தனது மகனுக்கு சீம்பால் கொடுத்து விட்டு வந்துள்ளார். காலை 11:30மணியளவில் அண்ணா நகர் மேம்பாலத்தின் கீழ் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வந்தபோது, சேலம் - விருத்தாசலம் செல்லும்ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கிணற்றில் தவறி விழுந்து பெண் பலிதியாகதுருகம் : திம்மலையில் கிணற்றில் தவறி விழுந்த பெண் இறந்தார்.

தியாகதுருகம் அடுத்த திம்மலை புதிய காலனியைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி சுசீலா, 49; இவர் தனது விவசாய நிலத்திற்கு நேற்று காலை சென்றார். அங்கு பாசன கிணற்றை எட்டிப் பார்த்தபோது, தவறி கிணற்றினுள் விழுந்தார்.தண்ணீர் குறைவாக இருந்ததால் பாறையில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுசீலா இறந்தார். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்
செனகலில் படகு கவிழ்ந்து 13 பேர் பரிதாப பலிடாக்கர்-மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் இருந்து, ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், ௧௩ பேர் இறந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் வறுமையும், வன்முறையும் அதிகரித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் இருந்த பலர் , ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய, ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், செனகலில் இருந்து ௧௫௦க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிய படகு, ஐரோப்பா நோக்கி கடலில் சென்றது. செனகலின் கசாமான்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, படகு திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, படகு கவிழ்ந்தது. தகவல் அறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ௯௧ பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ௧௩ பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ௪௦க்கும் அதிகமான அகதிகளின் நிலை தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.


latest tamil news
கணவரின் காம லீலைக்கு உதவி மனைவிக்கு 20 ஆண்டு சிறைநியூயார்க்-அமெரிக்காவில், ஏராளமான சிறுமியரை சீரழித்த நிதி நிறுவன அதிபருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், அவர் மனைவிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் எப்ஸ்டீன், இவரது மனைவி கெவின் மேக்ஸ்வல். இருவருக்கும் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள், மற்றும் வேறு பல நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இதைப் பயன்படுத்தி, 17 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான சிறுமியர், பெண்கள் ஆகியோரை எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பல பெண்களை உலகத் தலைவர்களுக்கு விருந்து படைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு வழக்கில், எப்ஸ்டீன், 13 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்தார். அதன் பின் மேலும் பல பெண்கள் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். எனினும், கணவரின் செயல்களுக்கு மனைவி மேக்ஸ்வல் உதவி செய்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று, மேக்ஸ்வலுக்கு, 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் மீது பாலியல் புகார் கூறிய கியுப்ரி என்ற பெண், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தன்னை விருந்தாக்கியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓராண்டுக்கு முன் ஆண்ட்ரூவும், கியுப்ரியும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X