வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை மாநகராட்சி வார்டு கட்டுமானங்கள், ரோடு உட்பட மொத்த விபரமும் அடங்கிய அளவீட்டு பதிவேட்டுடன் கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்வதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

மாநகராட்சி மைய அலுவலகம் உட்பட மண்டல, வார்டு அலுவலங்களில் அளவீட்டு பதிவேடு (மெஷர்மென்ட் புத்தகம்) இருக்கும். அதில் ஒரு மண்டலத்தில், ஒரு வார்டில் கட்டிய வீடுகள், கட்டடங்கள், கட்டுமான பொருட்கள் உட்பட சிறு துரும்பு, கம்பிகள் குறித்து கூட தெளிவாக நீள, அகல உயர அளவுகளுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதேபோல் மாநகராட்சி தெருவில் எத்தனை அடி நீளம், அகலம், உயரம் ரோடு அமைக்கப்பட்டது முதற்கொண்டு பிற திட்ட பணிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். சுருக்கமாக கூறினால் இந்த பதிவேடுதான் மாநகராட்சியின் ஜாதகம். இது இல்லாமல் ஒப்பந்த நிறுவனம் உட்பட பிற திட்ட பணிகளுக்குரிய பணம், ரசீது வழங்க முடியாது.
முந்தைய கமிஷனர்கள் பதிவேட்டை பெரிதாக கண்டுகொண்டதில்லை. தற்போதைய கமிஷனர் பதிவேட்டுடன்தான் ஆய்வுக்கே செல்கிறார். நேற்று முன் தினம் கூட மண்டலம் 3க்கு (மத்தி) உட்பட்ட தெருக்களில் அமைத்த தார் ரோடு பதிவேட்டில் குறிப்பிட்டபடி அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.ஒப்பந்த நிறுவனத்தினரை கைக்குள் போட்டு கொண்டு பதிவேட்டில் பல குளறுபடி, முறைகேடு செய்வதில் அதிகாரிகள், அலுவலர்கள் கைதேர்ந்தவர்கள்.

உதாரணமாக 20 அடிக்கு ரோடு அமைத்து விட்டு 22 அடி என பதிவேட்டில் குறிப்பர். கூடுதல் 2 அடிக்கான கட்டுமான பொருட்கள், பணத்தை அபேஸ் செய்துவிடுவர். கமிஷனர் பதிவேட்டை ஒப்பிட்டு ஆய்வு செய்வதால் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என அதிகாரிகளும், அலுவலர்களும் கலக்கத்தில் உள்ளனர். இதே போல் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களையும் அகற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.