சிவகங்கை: அ.தி.மு.க., உட்கட்சி பூசலால் சிவகங்கை மாவட்ட சுவர்களில் இரு கோஷ்டியினரிடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை வேண்டும் என முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் வேண்டுகோள் வைத்தனர். சென்னையில் நடந்த பொதுக்குழுவில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையிலான கட்சியினர் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.தனது பலத்தை நிரூபிக்க பன்னீர்செல்வம் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.
விரைவில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை காண்பிப்பதற்காக சிவகங்கை, காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் மூலம் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் சண்முகம், முனுசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தவிர சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள சுவர்களில் அ.தி.மு.க., வின்பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரின்ஆதாரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் மூலம் எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர். நாளுக்கு நாள் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து வருகின்றன.