சென்னை : தனியாரிடமிருந்து கையகப்படுத்தாமல், புதிய முறையில், நிலத் தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு நிலங்களை கையகப்படுத்துவது சிக்கலாகிறது.இதில் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் வழக்குகளை நடத்தி முடிப்பதில், சிக்கல் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக குஜராத் போன்ற மாநிலங்களில் பின்பற்றப்படுவது போன்ற, நில தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான வரைவு விதிகள், 2020ல் வெளியிடப்பட்டன.
இதன்படி, 'ஒரு பகுதியில் தனியாரின் நிலங்களை கையகப் படுத்தி, நிலத் தொகுப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். உரிமையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மனைகள் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
![]()
|
விதிகள் திருத்தம்
இத்திட்டத்துக்கு தேவையான நிலங்களை தனியாரிடம் பெற முயற்சி செய்தால், அது மீண்டும் பழைய முறைப்படி பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரியவந்தது. எனவே, இதற்காக சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட விதிகள்: இதன்படி, உரிமையாளரின் பெயரில் உள்ள நிலங்களை கையகப் படுத்தாமல், அதை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேம்பாட்டு பணிகள் முடிந்த பின், உரிமையாளருக்கு உரிய பகுதியை அவரிடம் ஒப்படைத்த பின், பொது வசதிக்கு என வரையறுக்கப்பட்ட நிலங்கள் பெறப்படும். இதில் ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்கு தேவையான சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகள் முறைப்படி அமைக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.