சேலம்: ஜெ., கார் டிரைவர் கனகராஜின் மனைவியிடம் அநாகரிகமாக நடந்ததாக, அவரின் அண்ணனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, சித்திரபாளையம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 36. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக பணிபுரிந்த இவர், 2017ல் பைக்கில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார். ஜெ.,க்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி.
சென்னை, கே.கே., நகர், பாலை தெருவில் வசித்து வரும் கனகராஜ் மனைவி கலைவாணி, 28, தன் கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் ஆதாரங்கள், சாட்சிகளை கலைத்ததாக, கனகராஜ் அண்ணன் தனபாலை, 2021, அக்டோபர் மாதம் கைது செய்தனர். சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கனகராஜ் மனைவி கலைவாணி, கடந்த 27ம் தேதி, ஜலகண்டாபுரம் போலீசில் அளித்துள்ள புகாரில், கனகராஜின் அண்ணன் பழனிவேல், 44, தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறினார். அதன்படி, பழனிவேல் மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கனகராஜுவின் தாய் சித்தாயி நிருபர்களிடம் நேற்று கூறும் போது, ''மாலை நேரத்தில் குழந்தைகளுடன் போக வேண்டாம் என்று குழந்தையை இழுத்தபோது, சேலையை பிடித்து இழுத்து விட்டதாக கலைவாணி, என் மகன் பழனிவேல் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார்,'' என்றார்.