சென்னை: அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல், சேலத்தில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பலகட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். போராடிய டாக்டகர்களை இடமாறுதல் செய்து, அ.தி.மு.க., அரசு பழி வாங்கியது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.
இதனால், டாக்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டாக்டர் லெட்சுமி நரசிம்மனின் நினைவிடம் அமைந்துள்ள, சேலம் மாவட்டம், மேட்டூர் ஒன்றியம், நங்கவள்ளி பிரதான சாலையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் துவக்கியுள்ளனர். அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை, அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக்குழு உள்ளிட்ட அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களையும் அழைத்துப் பேசி, கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.