வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவின் படிவம் ஏ, படிவம் பி ஆகியவற்றில் கையெழுத்திடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவு பெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (ஜூன் 30) கடைசி நாள் ஆகும். 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக.,வில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கையொப்பமிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பாகவே படிவங்களை வழங்கினால் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணியுடன் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த உடன் சின்னம் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவங்கும் என்பதால், ஒருங்கிணைப்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திடாத பட்சத்தில், அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் இல்லாமல் சுயேச்சை சின்னங்களில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலால் காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாநகராட்சிகள், தேனி, மயிலாடுதுறை நகராட்சிகள், புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஒன்றில் கூட அதிமுக போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.