வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், பா.ஜ.,வின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்க உள்ளார்.
மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சில சிவசேனா எம்எல்ஏ.,க்கள் அதிருப்தி தெரிவித்ததுடன் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், கவர்னரின் உத்தரவு செல்லும் என, நேற்றிரவு தீர்ப்பளித்தது. இதையடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியை தவிர்க்கும் நோக்கில், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஷிண்டேவுக்கு ஆதராக உள்ள எம்எல்ஏ.,க்கள் அனைவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் தரப்பு ஆதரவு கடிதத்துடன் மும்பை வந்த ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸை சந்தித்தார். பிறகு இருவரும் சேர்ந்து கவர்னர் இல்லத்திற்கு சென்று ஆட்சியமைக்க உரிமைக் கோரினர். அப்போது பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஆகியோருக்கு கவர்னர் பகத்சிங் கோசியாரி இனிப்பு ஊட்டினார். பின்னர் நிருபர்களிடம் பட்னவிஸ் கூறியதாவது: 2019ல் மஹாராஷ்டிர மக்கள் பா.ஜ.,வின் ஆட்சியையே விரும்பினர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தேர்தலுக்கு பின் உத்தவ் தாக்கரே மீறினார்.

பால் தாக்கல் தாக்கரே கொள்கைகளுக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன. சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் செயல்பாடு ஹிந்துத்துவா, சாவர்க்கரை அவமதிப்பதாக இருந்தது. 2019ல் சிவசேனா எங்களுக்கு துரோகம் செய்தது. 2019ல் மக்களின் தீர்ப்பை அவமானப்படுத்தி விட்டு மஹா., விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டது. மஹாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார். இவரின் பதவியேற்பு இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும். அவருக்கு பா.ஜ., முழு ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கியது திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.