வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :நாட்டில் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்களின் தரவரிசை பட்டியலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
கடந்த 2020ல், மத்திய அரசு அறிமுகம் செய்த, வணிகச் சீர்திருத்த செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், ஏழு மாநிலங்கள் மிகச் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழகம் ஆகியவை மிகச் சிறந்த ஏழு மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இம்மாநிலங்களை அடுத்த பட்டியலில், ஹிமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவை இடம்பெற்று உள்ளன.
இந்த முயற்சியின் நோக்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது, வணிகத்திற்கு ஏற்ற சூழலை வளர்ப்பது மற்றும் வணிகத்தை செயல்படுத்துவதில் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டியை அறிமுகப்படுத்துவது ஆகும்.இதன் வாயிலாக, வணிகம் செய்வதை எளிதாக்க இயலும் என்பதால், அரசு இந்த பட்டியலை தயார் செய்து வெளியிடுகிறது.மத்திய வர்த்தக துறை அமைச்சகம், இதற்கு முன் இருந்த முறையை மாற்றி, சிறந்த சாதனையாளர்கள், சாதனையாளர்கள் என பல பிரிவுகளை ஏற்படுத்தி, நடப்பு ஆண்டில் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.