ஜூலை 1, 1945
தமிழில் குடும்பப் பாங்கான படத்திற்கான, தேசிய விருதைப் பெற்ற முதல் திரைப்படம், சம்சாரம் அது மின்சாரம். அதை தயாரித்து விற்க முற்பட்ட போது, யாரும் வாங்கத் தயாரில்லை. அதன்பின், தயக்கத்துடன் வாங்கியோர் பல மடங்கு லாபமடைந்தனர். தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் எளிய, லாப இயக்குனராக விளங்கியவர் விசு.
மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் எனும் விசு, 1945ல், இதே நாளில் பிறந்தார். ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக்குழு கலைஞராக கலைத்துறையில் நுழைந்து, கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பட்டினப் பிரவேசம் படத்தில் வசனகர்த்தாவாக பிரவேசித்தார்.
ரஜினிக்கும் நகைச்சுவையாக நடிக்க வரும் என்பதை, தில்லுமுல்லு, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களின் திரைக்கதை வசனத்தால் நிரூபித்தார். குடும்பம் ஒரு கதம்பம், பெண்மணி அவள் கண்மணி, வேடிக்கை என் வாடிக்கை என சந்த தலைப்புகளில், திரைப்படங்களை எடுத்தார். கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல பரிமாணங்களில் ஒளி வீசினார்.
இவரின், 'அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம்' எனும், பேச்சரங்க நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தவை. விசு, 2020 மார்ச் 22ல், தன், 74வது வயதில் மரணித்தார்.
குடும்ப படங்களின் குணச்சித்திர நாயகன் பிறந்த தினம் இன்று!