காஞ்சிபுரம்:கழிவு நீர் கால்வாயின் கீழ், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீரில் கழிவு நீர் கலந்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிவாசிகளுக்கு பாலாற்றில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் இருந்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதில், கோளிவாக்கம் காலனியில் கழிவு நீர் கால்வாயின் கீழ், நிலத்தடியில் புதைக்கப்பட்டு உள்ள குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் கழிவு நீருடன் கலந்து கால்வாயில் வெளியேறி வருகிறது.இதனால், கோளிவாக்கம் பகுதிவாசிகளுக்கு வாந்தி, பேதி ஏற்படும் அபாயம் உள்ளது.இரு தினங்களுக்கு முன் குருவிமலை கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீரால் அக்கிராமத்தில் பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
இதை தொடர்ந்து குருவிமலை கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இந்நிலையில், கோளிவாக்கம் கிராமத்தில் குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீரில் கழிவு நீர் கலந்து, தங்கள் ஊரிலும் வாந்தி, பேதி ஏற்படுமோ என, கோளிவாக்கம் கிராம வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, கோளிவாக்கம் கிராமத்தில், காலரா ஏற்படுவதற்கு முன், கழிவு நீர் கால்வாயின் கீழ், நிலத்தடியில் புதைக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ள மெயின் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.