காஞ்சிபுரம், ஜூன் 30 -காஞ்சிபுரம் பாலாற்றில் கோடையிலும் வறட்சி இன்றி தண்ணீர் செல்வதால் விவசாயிகள், ஆற்று படுகை கிராமக்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பாலாற்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஆற்றில் தண்ணீர் சென்றது. நடப்பாண்டு கோடையில் தண்ணீர் வற்றினாலும் அவ்வப்போது பெய்த மழையில் பாலாற்றின் ஒரு ஓரத்தில் தண்ணீர் சென்றது. இதற்கு முன் கோடை காலத்தில் ஆடு, மாடுகள் குடிக்க கூட தண்ணீர் இன்றி வறட்சியுடன் காணப்பட்டது.
நடப்பாண்டு அந்நிலை மாறி வறட்சியின்றி குளிர்ச்சியை ஏற்படுத்தி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழையினால் நடப்பாண்டு ஆற்றில் ஓரளவு தண்ணீர் வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையான பெரும்பாக்கம் பாலாற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் பரவலாக செல்கிறது.
இதனால் சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள்,அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வெயிலுக்கு குளித்து விட்டு செல்கின்றனர். இது வரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டு பாலாறு வறட்சியில்லாமல் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு பருவமழை ஆக., மாதம் ஆரம்பிக்கும் அதுவரை இதே போல் தண்ணீர் சென்றால் ஆண்டு முழுவதும் தண்ணீர் சென்ற சிறப்பு பெற்று விடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.