காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், குறுங்காடு அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'பசுமை தேடி, பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி, பசுமை கூடாரம், பசுமை காஞ்சி, மகிழம் குழுமம்' உள்ளிட்ட சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், திருப்பருத்திக்குன்றம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் குறுங்காடு அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில், ஏனாத்துார் அரசு உயர் நிலைப் பள்ளில் குறுங்காடு அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், தன்னார்வ அமைப்பினர், பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, குறுங்காடு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதில், புங்கன், வேம்பு, நாவல், இலுப்பை, நெல்லி, விளாம், பாதாம், அரசு, பூவரசன், புரசு உள்ளிட்ட 210 மரக்கன்றுகள் நடப்பட்டன. ரோட்டரி கிளப் தலைவர் முருகேஷ், பசுமை கூடாரம் அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.