வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, 1964ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். மும்பையின் தானேவில் அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். பிளஸ் 1 வகுப்பு வரை படித்த ஷிண்டேவால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.
குடும்பத்துக்கு உதவும் வகையில் ஆட்டோ ஓட்டத் துவங்கினார். ஆட்டோ டிரைவராக இருந்த ஷிண்டேவுக்கு, ௧௯௮௦களில் தானே மாவட்ட சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவின் தொடர்பு கிடைத்தது. இதையடுத்து, அவர் சிவசேனாவில் சேர்ந்தார். திகேவின் சீடர் என்பதால், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
![]()
|
கடந்த 1997ல் முதல் முதலாக, தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார். பின், 2004 முதல், தானேவில் உள்ள கோப்ரி - பக்பகாடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார்.
மாநிலத்தில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், 2014 - 19 வரை இருந்த பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சியில், ஷிண்டே பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த மஹா விகாஸ் அகாடி கூட்டணி அரசிலும், நகர மேம்பாடு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இப்போது, மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.