ஸ்ரீபெரும்புதுார், :பட்டா பெயர் மாற்றம் செய்ய, 6,௦௦௦ ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 50, இவர் ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். குணகரம்பாக்கம் அடுத்த ஓ.எம்., மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் உள்ளதால், அந்த பொறுப்பையும் உதயகுமார் கூடுதலாக கவனித்து வந்தார்.இந்நிலையில், ஓ.எம்., மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 24, என்பவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில், ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்துஇருந்தார்.இந்த மனு மீது விசாரணைக்காக தினேஷை, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் அழைத்தார். அப்போது 6,௦௦௦ ரூபாய் கொடுத்தால், பட்டா பெயர் மாற்றம் பணிகளை விரைந்து முடித்து கொடுப்பதாக உதயகுமார் கூறியுள்ளார்.தினேஷ், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயனம் தடவிய 6,௦௦௦ ரூபாயை தினேஷிடம் கொடுத்து அனுப்பினர்.நேற்று தினேஷிடம் இருந்து, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் லஞ்சப்பணத்தை வாங்கிய போது, அவரது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதயகுமாரை பிடித்தனர். விசாரணைக்கு பின் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.