பெ.நா.பாளையம்:தேனி வளர்ப்பு மற்றும் பயிர் மகசூலில் தேனீக்களின் பங்கு அதிக அளவு இருப்பதால், விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு, அதிக பயன்பெறலாம் என, வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலர் மைதிலி, துணை வேளாண் அலுவலர் விஜய கோபால் கூறியதாவது:அதிக அளவில் மலர்கள் பூத்த இடங்களிலும் மரம், செடி, கொடி அடர்ந்த இடங்களிலும், தேனீப் பெட்டி அமைக்க வேண்டும்.
20 கிலோ தேன் சேகரிக்க, 100 பூத்த மரங்களும், 2 முதல், 4 ஏக்கர் வரையிலான பயிர்கள் அடங்கிய பயிர் பரப்பும் அவசியம்.தேனீ வளர்ப்பின் அருகில் சுத்தமான நீர் கிடைக்கக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும். பலத்த காற்று தேனீக்களை பாதிக்காத வண்ணம், காற்றைத் தடுக்கும் மரங்கள் உள்ள இடமாக இருக்கவேண்டும்.காலை, மாலை நல்ல சூரிய வெளிச்சம் பெறக்கூடிய வகையில் இருக்க வேண்டும். கோடை காலத்தில் அதிக வெப்பம் படாது பாதுகாக்க வேண்டும். அபீஸ்செரீனா, அபீஸ் மெல்லிப்பிரா என்ற இரண்டு வகை தேனீக்களை தேர்ந்தெடுக்கலாம்.ஒவ்வொரு தேனீ பெட்டியிலும், போதுமான அளவு உணவு இருக்கிறதா, அப்படி இல்லையெனில் உணவுக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும். ராணித்தேனீ உள்ளதா, முட்டையிட்டு வருகிறதா, அப்படி இல்லை எனில் புதிய ராணி தேனீ ஏற்பாடு செய்தல் வேண்டும். முட்டையிட ஏதுவாக போதுமான சட்டங்கள் உள்ளதா என பரிசோதித்தல் வேண்டும். ஏதேனும், நோய் அல்லது எதிரிகள் ஏதும் உள்ளதா என்பதை அடிக்கடி கண்காணித்தல் வேண்டும்.தேனீ பெட்டிகளை பரிசோதிக்கும் போது, கருப்பு நிற உடைகளை தவிர்த்தல் வேண்டும். கருப்பு நிற உடைகள், தேனீக்களுக்கு எரிச்சல் ஊட்டும். கடுமையான வாசம் உள்ள திரவியங்கள், தேங்காய் எண்ணெய், கடிகாரம் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். முகக்கவசம், கையுறை போன்ற சாதனங்களை அணிந்து கொண்டு தேன் எடுக்க வேண்டும். மின்னும், கண்ணை உறுத்தும் ஆடைகளை தவிர்க்க வேண்டும். காலையில் தேனீக்கள் வெளியே சென்ற பின்னர், புகையை செலுத்தினால் அடியில் உள்ள பெரிய தேனீக்கள் வெளியேறிவிடும். சிறிய தேனீக்கள் மட்டுமே இருக்கும், அவைகள் கொட்டாது.பெட்டியில் உள்ள, 5 சட்டங்களையும் தனித்தனியே வெளியே எடுத்து, அடையில் உள்ள தேனை பிரித்தெடுக்க வேண்டும். எடுத்த தேனை வடிகட்டி பயன்படுத்தலாம்.இவ்வாறு, துணை வேளாண் அலுவலர் விஜயகோபால் கூறினார்.
தேனீ வளர்க்கும் விவசாயி விஜயகணபதி கூறுகையில்," பெரியநாயக்கன்பாளையம் வட்டார மலையோர கிராமங்களில் தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதியிலிருந்து வரும் தேனீக்களுடன், சில நேரங்களில் தோட்டங்களில் வளர்க்கும் தேனீக்களும் சேர்ந்து சென்று விடுகின்றன.தேனீ பெட்டிகள் வாகை மரத்தில் செய்யப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பெட்டிகள், சாதாரண ரீப்பர் கட்டைகளில் வைத்து செய்யப்படுவதால், தேனீக்கள் அதில் தங்குவதில்லை. மேலும், சில நாட்களில் அந்த தேனீ பெட்டிகள் பழுதடைந்து விடுகின்றன" என்றார்.