ஹாசன்-''ராஜஸ்தானில் நடந்த டெய்லர் கன்னையா லால் கொலை வழக்கில், முஸ்லிம் அமைப்பினர் ஏன் வாய் திறக்கவில்லை,'' என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் கேள்வி எழுப்பினார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:ராஜஸ்தானில் நடந்த டெய்லர் படுகொலை தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள், தலைவர்கள் வெளியே வந்து பேச வேண்டும். ஏன் பேசவில்லை. துணியை தைக்க கொடுப்பதாக நடித்து, கத்தியால் வெட்டியுள்ளனர். இது கோழைகளின் செயல்.இதற்கு முன் பல்வேறு அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு அமைப்பை தடை செய்தால், வேறொரு பெயரில் வருகின்றனர். ராஜஸ்தான் அரசு, தவறு செய்திருந்தால் அரசு நிலைக்காது.காங்கிரஸ் 'பி' டீமா, ம.ஜ.த., 'பி' டீமா என்பது தெரியாது. ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் கால்களை பிடிப்பது மட்டுமே பாக்கி. அந்த நிலைக்கு ம.ஜ.த., சென்றது. இக்கட்சிகளுக்கிடையே, என்ன ஒப்பந்தம் நடந்துள்ளது என்பதே தெரியவில்லை.குமாரசாமி, 'நானே முதல்வர்' என்கிறார். 'நாங்கள் எந்த காரணத்துக்காகவும், ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தராமல், 120 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வருவோம்,' என காங்கிரசார் கூறுகின்றனர். நாங்களும் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சிக்கு வரும்.ஏற்கனவே நாட்டில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., ஆட்சிக்கு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.