தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கு, இன்று வருகை தரும், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட தலைவர்களை வரவேற்க, பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் நாளை துவங்குகிறது.அடுத்த சட்டசபை தேர்தலில், தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பதற்காக, இந்த கூட்டத்தில் முக்கிய வியூகங்கள் வகுக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
நடவடிக்கை
வட மாநிலங்கள் பலவற்றில், பா.ஜ., அடிப்படை கட்டமைப்புடன், மிகுந்த செல்வாக்குடன், ஆட்சி நடத்தி வருகிறது. தென் மாநிலங்களில், கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில், பா.ஜ.,வின் வளர்ச்சி சற்று குறைவாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ., பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இங்கு ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை வீழ்த்தி விட முடியும் என்ற நம்பிக்கை, பா.ஜ.,வுக்கு வந்துள்ளது.
முக்கிய பணி
![]()
|
சமீபத்தில் நடந்து முடிந்த கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி, பா.ஜ.,வுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி உரையாடியதும், அக்கட்சியினருக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.இவர்கள் ஒவ்வொருவரிடமும், பல விஷயங்களை கேட்டுத் தெரிந்த பிரதமர், அவர்களிடம் முக்கிய யோசனைகளையும், வியூகங்களையும்
பகிர்ந்துள்ளார். இந்த உரையாடல், மாநிலத்தின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இது, பா.ஜ.,வுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது.இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள, பா.ஜ., மேலிடம் தேசிய செயற்குழு கூட்டத்தை, செல்வாக்கு மிக்க வட மாநிலங்களில் நடத்துவதை தவிர்த்துவிட்டு, தெலுங்கானாவை தேர்வு செய்து உள்ளது. இதில், தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என தெரிகிறது.
நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா இன்று ஹைதராபாத் செல்கிறார். அவரை வரவேற்க, தெலுங்கானா மாநில பா.ஜ., சார்பில், பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், முக்கிய பணி அளிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
தெலுங்கானாவில், மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக தெரிந்து வைத்திருப்பதோடு, அங்குள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு வரும்படி, பா.ஜ., மேலிடத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை காலை, பா.ஜ., தேசிய பொதுச் செயலர்கள் மற்றும் தேசிய அளவிலான நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்த நாளான 3ம் தேதி, செகந்திராபாதில் உள்ள 'பெரேடு' கிரவுண்ட் எனப்படும் அணிவகுப்பு மைதானத்தில், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி
பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.இந்நிலையில், பிரதமர் மோடி சாப்பிடுவதற்காக, தெலுங்கானாவின் சிறப்பு மிக்க உணவு வகைகளை தயாரிக்க, மாநில பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. கரீம் நகரை சேர்ந்த யாதம்மா என்ற சமையல் கலைஞரிடம், தெலுங்கானா உணவுகளை தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -