கீழக்கரை : பொதுமக்கள் நலன் கருதி கவுன்சிலர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதித்தனர்.
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணை தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் செல்வராஜ் வரவேற்றார். கோரிக்கையை அதிகாரிகள் செயல்படுத்த முன் வருவதில்லை என அனைத்து கவுன்சிலர்களும் குரல் எழுப்பினர். பின் நடந்த விவாதம்:
துணை தலைவர் ஹமீதுசுல்தான்: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து விட்டு அதன் கட்டுமான பொருட்களை போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே கொட்டுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. நகராட்சி கமிஷனர் சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கு செல்லும் போது கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்பதில்லை.
தலைவர் செஹானஸ் ஆபிதா: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கட்டுமானப்பொருட்களை வைத்திருப்போர் மீது நோட்டீஸ் அனுப்பி உரியமுறையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கவுன்சிலர் சூரியகலா: பஸ் ஸ்டாண்ட் பகுதியை ஒட்டி உள்ள நகராட்சிக்கு சொந்தமான மீன் கடைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவும், புதிய பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணிகளை செய்யவும், பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் முகம்மது ஹாஜாசுஐபு: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நம்ம டாய்லெட் பயன்பாடு இன்றி வீணாக வைக்கப்பட்டுள்ளது.
அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. அவற்றை உரிய முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என் வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் முகம்மது காசிம் மரைக்கார்: பொதுமக்களுக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் அனுமதி இன்றி வேகத்தடை அமைத்துள்ளனர். அவற்றினை முறைப்படுத்த வேண்டும்.கவுன்சிலர் ஜெயலட்சுமி: தட்டான் தோப்பு தெருவில் மேடான பகுதிகளுக்கு காவிரி குடிநீர் பல மாதங்களாக வழங்கப்படவில்லை.கமிஷனர் செல்வராஜ்: வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும்.