வால்பாறை:அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. நடந்து முடிந்த, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில், இப்பள்ளியானது நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 75 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.நுாறு சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களை, மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.பத்தாம் வகுப்பு தேர்வில், மாணவன் வினோத்நம்பி; பிளஸ் 1 தேர்வில், சாய் பிரியதர்ஷினி, அமிர்தா; பிளஸ் 2 தேர்வில் ஈஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்றனர். அவர்களை பாராட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பரிசு வழங்கினார்.தலைமை ஆசிரியர் பேசுகையில், ''ஆசிரியர்களின் கடின உழைப்பால், பிளஸ் 1, தேர்வு எழுதிய, 18 பேரும் வெற்றி பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய, 13 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வுகளில், பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஒத்துழைத்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.''வரும் கல்வியாண்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற, பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும். குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து மாணவர்கள் திறம்பட படிக்க வேண்டும்,'' என்றார்.