ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மணல் தீடையில் தவித்த அகதிகள் 4 பேரை ஆபத்தான முறையில் படகில் மீனவர்கள் மீட்டு வந்தனர். மீனவர்களை மரைன் போலீசார் எச்சரித்தனர்.
இலங்கை வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த டோமினிக் 42, மனைவி சுதர்ஷினி 24, மகன் அனோஜின் 6, மகேந்திரன் 50, ஆகியோர் அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு கிடைக்காமல் தவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மன்னாரில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி வந்தனர்.
இவர்களை தனுஷ்கோடியில் இருந்து 7 கி.மீ., தூரமுள்ள 4ம் மணல் தீடையில் இறக்கி விட்டு இலங்கை படகோட்டிகள் திரும்பி சென்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு தீடையில் இறங்கிய அகதிகளை நேற்று காலை 10:--00 மணி வரை மீட்க யாரும் செல்லாததால் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். இந்திய கடலோர காவல் படை, தமிழக மரைன் போலீசாரிடம் 4 ரோந்து படகுகள் இருந்தும் அகதிகளை மீட்கவில்லை.
தனுஷ்கோடி கடலில் மீன்பிடித்த மீனவர்கள் மனிதாபிமானம் அடிப்படையில் அவர்களை மீட்டு கரையில் இறக்கினர்.அகதிகளிடம் மண்டபம் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ., காளிதாஸ் விசாரித்து முகாமிற்கு அனுப்பினர். லைப் ஜாக்கெட், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஆபத்தான முறையில் படகில் அகதிகளை மீட்டு வந்த மீனவர்களை எச்சரித்தும் அனுப்பினர்.