உடுமலை:சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ அமைப்புகளுக்கு கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.நாடு முழுவதும் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் குற்றங்களும் அதிகரித்துள்ளன. இவ்வகையான, ஆபத்தான குற்றங்களை கையாளும் பொருட்டு, இந்திய அரசு சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.'சைபர் கிரைம்' குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க, நிர்பயா நிதி திட்டத்தில், www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி மோசடி தொடர்பாக புகார் அளிக்க வசதியாக புதிய அமைப்பு ஏற்படுத்தி, மத்திய அரசு செயல்படுத்தியுள்ளன.சைபர் கிரைம் மேலாண்மை அமைப்பில், புகார்களை பதிவு செய்ய, 1930 என்ற தேசிய அளவிலான, கட்டணமில்லா தொடர்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையவழி குற்றங்களை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், 'ஒன் ஸ்டாப் சென்டர்', பெண்கள் ெஹல்ப்லைன், 'சைல்டு லைன்' என, பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கலெக்டர் வினீத் கூறுகையில், ''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்கவும், நிதிமோசடி குற்றங்களை தடுக்கவும், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள், 'சைபர் கிரைம்' குற்றங்களை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'ட்விட்டர் (Cyberdost), பேஸ் புக் (CyberDost14C), இன்ஸ்டாகிராம் (cyberdost14C), டெலிகிராம் (cyberdosti4c) ஆகிய சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.