உடுமலை:உடுமலையிலுள்ள போலீஸ் குடியிருப்பு பராமரிப்பு இல்லாமல், கட்டடங்கள் பழுதடைந்து வருகிறது. வளாகத்தை சுற்றிலும், புதர் மண்டி காணப்படுவதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.உடுமலை டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசாருக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. 90 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பல ஆண்டுகளான நிலையில், தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை.
இதனால், கட்டடங்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், கழிவு நீர் மற்றும் குடிநீர் செல்லும் குழாய்கள் உடைந்தும், கட்டுமானங்கள் வீணாகி வருகிறது.மேலும், வளாகத்தை சுற்றிலும், மரங்கள், முட்செடிகள், கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகளவு உலா வருகின்றன. கழிவு நீர் குழாய்கள் உடைப்பு காரணமாக, திறந்த வெளியில் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசார் ஒரு வித அச்சத்துடனே வசிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, போலீஸ் குடியிருப்பிலுள்ள கட்டடங்கள், குழாய்கள், மின் உபகரணங்களை புதுப்பிக்கவும், வளாகத்திலுள்ள முட் புதர்களை அகற்றி, கான்கிரீட் தளம் அமைக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.