புதுடில்லி :இந்தியாவின் மிகப் பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி ., எனும், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டு, நேற்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு, ஜூலை முதல் தேதி அன்று ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. வரி வசூலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஜி.எஸ்.டி., ஒரு முன்னுதாரணமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
தற்போது, ஜி.எஸ்.டி., நான்கு வரி விகித அடுக்குகள் கொண்டதாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீத வரி விதிப்பும், ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரிவிதிப்பும் கொண்டுள்ளது. இவற்றுக்கு இடையே 12 மற்றும் 18 சதவீத வரிவிதிப்புகள் உள்ளன.
![]()
|
இந்தியா போன்ற நிதி கூட்டாட்சி கொண்ட நாடுகள் எதிலும் அறிமுகம் செய்யப்படாத போதும், முன்அனுபவமற்ற நிலையிலும், மத்திய - மாநில அரசுகள் இணைந்து, சுமுகமான முடிவுகளை மேற்கொண்டு, வரி வசூலில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இதுவரை மொத்தம் 47 கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. இவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இன்று சராசரி மாத வரி வருவாய் என்பது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்று மாறி, அது ஒரு புதிய இயல்பாகவே
ஆகியுள்ளது.
சாதனை அளவாக, கடந்த ஏப்ரலில் 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரலில், முதன் முதலாக, வரி வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.
ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு மாற்றங்கள், திருத்தங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து, வரி செலுத்துவதை எளிமையாக்கி வருகிறது, அரசு. அதுமட்டுமின்றி; தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரி ஏய்ப்புகளையும் கணிசமாக கட்டுப்படுத்தி இருக்கிறது.
அத்துடன், வரி செலுத்துவதை எளிமையாக்குவதில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இன்னும் செல்ல வேண்டிய துாரம் அதிகம் இருப்பினும், கடந்து வந்த பாதையை பார்க்கும்போது நிச்சயம் பெருமிதமாக இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பல வெற்றிகள், சில சறுக்கல்களுடன், ஜி.எஸ்.டி.,யின் பயணம் ஐந்து ஆண்டுகளை கடந்து தொடர்கிறது.