கோவை:'பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு பாத்ரூம் பிட்டிங்ஸ் நிறைய வாங்கப் போறோம்' என்று கூறி, ஜாகுவார் நிறுவன விற்பனையாளரிடம் 2.46 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ஆர்.எஸ்.,புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியை சேர்ந்தவர் சதீஷ், 63. இவர், பாத்ரூம் பிட்டிங்ஸ் மற்றும் சானிட்டரிபொருட்கள் தயாரிப்பில், பிரபலமான ஜாகுவார் நிறுவனத்தின் தயாரிப்புகளை, கோவையில் விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், லஷ்மி நாராயணன் என்பவர் ஜூன் 24ல் தொடர்பு கொண்டு பேசினார். தங்கள் நிறுவனம் சார்பில், மிகப்பெரிய திட்டம் ஒன்றை நிறைவேற்ற இருப்பதாகவும், அதற்கு அதிகப்படியான பாத்ரூம், சானிட்டரி பிட்டிங்ஸ் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.'அதற்கான டெண்டரில் பங்கேற்க இன்றே கடைசி நாள், உடனடியாக டெண்டரில் கலந்து கொள்வதற்கான (இ.எம்.டி.,) டிபாசிட் தொகை 2.46 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து, பெரிய திட்டம் ஒன்றுக்கு பொருட்கள் கேட்பதாக, ஏற்கனவே ஜாகுவார் நிறுவனத்தில் இருந்தும் சதீஷ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் லஷ்மி நாராயணன் கூறுவதை உண்மை என்று சதீஷ் நம்பினார். அவர் கூறிய வங்கி கணக்குக்கு, டெண்டர் டிபாசிட் தொகையை சதீஷ் அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட லஷ்மி நாராயணன், அதன்பிறகு போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார்.
சந்தேகம் கொண்ட சதீஷ், வெவ்வேறு இடங்களில் விசாரித்தபோது, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில், லஷ்மி நாராயணன் என்ற பெயரில் யாரும் இல்லை என்பதும், கோவையில் பெரிய திட்டம் எதுவும் நிறைவேற்றப் போவதில்லை என்றும் தெரியவந்தது.மோசடி செய்யும் நோக்கத்துடன், பாரத் பெட்ரோலியம் அதிகாரியாக நடித்தவர், தன்னையும், ஜாகுவார் நிறுவன அதிகாரிகளையும் ஏமாற்றியதை அறிந்த சதீஷ், கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.எஸ்.ஐ., முத்து வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் தண்டபாணி, மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகிறார்.