கோவை;ஆபாச இணையதளத்தில் பரவிய விஷம தகவலால் அதிர்ச்சியடைந்த கோவை அபார்ட்மென்ட்வாசிகள், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.ஆபாச இணையதளம் ஒன்றில், 'இந்த இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசையா' என்று கேட்டிருந்தனர். அதில் இருக்கும் பெண்களின் படத்தை பார்த்த சபலப் பேர்வழிகள் பலர், விருப்பம் தெரிவித்தனர். அவர்களிடம், 'கூகுள் பே மூலம் பணம் செலுத்தினால் பெண்கள் இருக்கும் இடம் தெரிவிக்கப்படும். நீங்கள் அங்கு சென்று விடலாம்' என்று ஆசை வார்த்தைகளை கூறியிருந்தனர்.
அதை உண்மை என்று நம்பிய சபலப் பேர்வழிகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் வழியாக பணத்தை செலுத்தினர். பணம் செலுத்தியவர்களை, கோவையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட அபார்ட்மென்ட்டுக்கு செல்லும்படியும், அங்கு விபசார பெண்கள் தயாராக உள்ளனர் என்றும், இணையதளத்தில் தகவல் தெரிவித்திருந்தனர்.அதன்படி குறிப்பிட்ட அந்த அபார்ட்மென்ட்டை தேடி ஆண்கள் வரத் தொடங்கினர். ஆனால், அந்த அபார்ட்மென்டில், அவர்கள் தேடி வந்த பெண்கள் எவரும் இல்லை.'இது குடும்பத்தினர் மட்டுமே வசிக்கக்கூடிய அபார்ட்மென்ட். இந்த படங்களில் இருக்கும் பெண்கள் யாரும் இங்கு இல்லை' என்று கூறி, சபலப் பேர்வழிகளை வாட்ச்மேன்கள் விரட்டி அனுப்புகின்றனர்.
பலர், வாட்ச்மேன்கள் கூறுவதை ஏற்காமல், தாங்கள் பணம் செலுத்தி விட்டதாக கூறி வாக்குவாதம் செய்கின்றனர். அபார்மென்ட்வாசிகளுக்கு பெரும் தொல்லையாக மாறிய இந்த பிரச்னை, கடந்த ஆறு மாதங்களாக நீடித்து வருகிறது.இதற்கு தீர்வு காண எண்ணிய குடியிருப்போர், பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். எஸ்.ஐ., மோகன், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின்படி வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.