சென்னை :ரகசிய ஓட்டுப்பதிவு என்பதாலும், கொறடா உத்தரவு கிடையாது என்பதாலும், ஜனாதிபதி தேர்தலில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம், அடுத்த மாதம் 25ம் தேதி நிறைவடைகிறது. அதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய, ஜூலை 18ல் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு மதிப்பு
![]()
|
ஜனாதிபதி தேர்தலில், தமிழக எம்.எல்.ஏ., ஒருவரின் ஓட்டு மதிப்பு, 176. இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநில எம்.எல்.ஏ., ஒருவரின் ஓட்டு மதிப்பு, 208. அதற்கு அடுத்தபடியாக, ஜார்க்கண்ட் மற்றும் தமிழக எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 176 ஆக உள்ளது. குறைந்தபட்சமாக சிக்கிம் எம்.எல்.ஏ., ஒருவரின் ஓட்டு மதிப்பு, ஏழு. அருணாசல பிரதேசம், மிசோரம் மாநில எம்.எல்.ஏ., ஒருவரின் ஓட்டு மதிப்பு எட்டு. அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, 1971ம் ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கையை, தற்போதுள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை வைத்து வகுத்தால், என்ன தீர்வு கிடைக்குமோ, அது தான் ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு.
உரிய காரணம்
அதே நேரத்தில், எம்.பி.,க்களை பொறுத்தவரை, அவர்களின் ஓட்டு மதிப்பு, அனைத்து மாநில எம்.பி.,க்களுக்கும் ஒன்று போலவே உள்ளது. ராஜ்யசபா, லோக்சபா எம்.பி., ஒருவரின் ஓட்டு மதிப்பு 700. தமிழகத்தை பொறுத்தவரை, தலைமைச் செயலகத்தில், சட்டசபை செயலர் அறை அருகில் உள்ள அரங்கில், ஓட்டுப்பதிவு நடக்கும். தமிழக எம்.எல்.ஏ.,க்கள் இங்கு ஓட்டளிக்கலாம். எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் ஓட்டளிப்பர். வேறு எங்கேனும் ஓட்டளிக்க விரும்பினால், வரும் 8ம் தேதிக்கு முன், உரிய காரணத்துடன், தேர்தல் கமிஷனில் கடிதம் அளிக்க வேண்டும்.
அனுமதி
அதேபோல் எம்.எல்.ஏ.,க்களும், வேறு மாநிலங்களில் ஓட்டளிப்பதாக இருந்தால், தேர்தல் கமிஷன் அனுமதி பெற வேண்டும். ஏற்கக்கூடிய காரணமாக இருந்தால், தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்கும்.எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டளிப்பு தொடர்பாக, ஜூலை 2ம் தேதி தகவல் அனுப்பப்படும். ஓட்டுப்பதிவு காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும்.தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படாது. ஓட்டுச்சீட்டு முறையே பின்பற்றப்படும். ஓட்டுப் பெட்டிகள், டில்லியில் இருந்து கொண்டு வரப்படும்.
அதை எடுத்து வருவதற்காக, ஜூலை 10 அல்லது 11ம் தேதி, சட்டசபை செயலக அதிகாரி, உரிய போலீஸ் பாதுகாப்புடன் விமானத்தில் டில்லி செல்வார். தேர்தல் கமிஷனில் ஓட்டுப் பெட்டியை பெற்று, மறுநாள் சென்னை திரும்புவார். விமானத்தில் தனி இருக்கையில் ஓட்டுப் பெட்டி வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.சட்டசபை செயலக வளாகத்தில், தனி அறையில் ஓட்டுப் பெட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறை 'சீல்' வைக்கப்படும். ஓட்டுப்பதிவு அன்று தான் பெட்டி வெளியில் எடுக்கப்படும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்று மாலையே உரிய பாதுகாப்புடன் விமானத்தில் டில்லி எடுத்துச் செல்லப்படும்.
ஓட்டுச்சீட்டு
எம்.பி.,க்கள் ஓட்டளிக்க பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க இளஞ்சிவப்பு நிறத்திலும், ஓட்டுச்சீட்டு அச்சிடப்படும். தமிழகத்தை பொறுத்தவரை, 300 ஓட்டுச் சீட்டுகள் அச்சிடப்படும். அதில், 25 ஓட்டுச் சீட்டுகள், ராஜ்யசபா செயலரிடம் வழங்கப்படும்.
தமிழக எம்.எல்.ஏ.,க்கள் வேறு எங்கேனும் ஓட்டளிக்க அனுமதி பெற்றால், அந்த மாநில தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்குவதற்காக, அவரிடம் 25 ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும் என, சட்டசபை செயலக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில், ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு, 176. அந்த வகையில் தமிழக எம்.எல்.ஏ.,க்கள் மொத்த ஓட்டு மதிப்பு 41 ஆயிரத்து 184.தமிழக எம்.எல்.ஏ.,க்கள் 234 பேரில், தி.மு.க.,வுக்கு 133; அ.தி.மு.க.,வுக்கு 66; காங்கிரசுக்கு 18; பா.ம.க.,வுக்கு ஐந்து; பா.ஜ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா நான்கு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த, 39 லோக்சபா எம்.பி.,க் களில், தி.மு.க., 24; காங்கிரஸ் எட்டு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு; அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு எம்.பி., உள்ளனர். ராஜ்யசபா எம்.பி.,க்கள் 18 பேரில், தி.மு.க.,வுக்கு, 10; அ.தி.மு.க.,வுக்கு நான்கு, காங்கிரஸ், ம.தி.மு.க., த.மா.கா., - பா.ம.க., கட்சி
களுக்கு தலா ஒரு எம்.பி., உள்ளனர்.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் அவருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.