வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜனாதிபதி தேர்தல், வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த திரவுபதி முர்முவும், காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.
![]()
|
இருவரும் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, தங்கள் ஆதரவு கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.அதன்படி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, நாளை 2ம் தேதி காலை 10:00 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி வருகிறார். அக்கார்டு ஓட்டலில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்று, தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இதுகுறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் காங்., ஆட்சியில் பலர் ஜனாதிபதிகளாக இருந்தனர். ஆனால். பா.ஜ.,வை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கினார்.கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி, ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதியாக்கினார்.
தற்போது, எளிய குடும்பத்தில் பிறந்த பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.இவர்கள் மூவரும் அரசியல் பின்புலம் இல்லாத, எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். 'அனைவரும் இணைவோம். அனைவரும் வளர்வோம்' என்ற பிரதமரின் லட்சியத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு எதிர்க்கட்சியில் உள்ள பிஜூ ஜனதாதளம் உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.ஆனால், சமூக நீதி பேசும் தி.மு.க.,வை சேர்ந்த துரைமுருகன், 'எங்களை சந்தித்து ஆதரவு கோரவில்லை' என்கிறார்.
பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்முவிற்கு ஆதரவு அளிக்காத தி.மு.க.,விற்கு சமூக நீதி பற்றி பேசத் தகுதியில்லை.தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளாரான திரவுபதி முர்மு, நாளை 2ம் தேதி காலை 10:00 மணிக்கு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வருகிறார். அவருக்கு மாநில பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
![]()
|