காரியாபட்டி : காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடி இருப்பதால் கூடுதல் பஸ்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுவதையடுத்து புது பஸ் ஸ்டாண்ட் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றுப்புற கிராமத்தினர் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய அளவிற்கு முக்கிய இடமாக உள்ளது. பேரூராட்சிக்கு வருவாய் ஏற்படுத்த பஸ் ஸ்டாண்டை சுற்றி வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. அப்போதிருந்த சூழ்நிலைக்கு இந்த இடம் போதுமானதாக இருந்தது.50 ஆண்டுகளை கடந்து, தற்போது 100 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பஸ் ஸ்டாண்ட் இதுவரை எந்த ஒரு வளர்ச்சியையும் கண்டதில்லை. மாறாக ஆக்கிரமிப்பால் பஸ் ஸ்டாண்டின் அளவு சுருங்கி, பஸ்ஸ்டாண்டுக்குரிய அம்சமே இல்லாமல், தன் அடையாளத்தை இழந்து வருகிறது. 6 பஸ்கள் மட்டுமே நிற்க கூடிய அளவிற்குத்தான் இடவசதி உள்ளது. இதில் நடைபாதை வியாபாரிகள், டூவீலர்கள் நிறுத்தி இட நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் உள்ளே நிற்கக் கூடிய 6 பஸ்களில் ஒரு பஸ்சை வெளியில் எடுத்துச் சென்றால் மட்டுமே அடுத்த பஸ் சை உள்ளே நிறுத்த முடிகிறது. அதுவரை அருப்புக்கோட்டை மதுரை மெயின் ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மற்ற வாகனங்கள் விலகி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. தினமும் இது போன்ற நெருக்கடியால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் முகம் சுழிக்கின்றனர்.இட நெருக்கடியால் காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் சிக்கி தவிப்பதை அரசு கவனத்தில் கொண்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.