சென்னை--கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மூச்சு திணறல்தமிழகத்தில் 2020 மார்ச்சில், கொரோனா தொற்று பரவல் துவங்கியது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவும், தனிமைப்படுத்தவும் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அரசின் நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது.கடந்த 2021ல் இரண்டாவது அலை பரவலின்போது, பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், ஆம்புலன்சில் காத்திருந்து, பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், நவீன படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. மாநிலம் முழுதும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள், சிறப்பு வார்டுகளில் உள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், அவை பூட்டி வைக்கப்பட்டன. முடிவுதற்போது, கொரோனா நான்காவது அலை பரவல் வேகம் எடுத்துள்ளது. மருத்துவமனைகளை நோக்கி பலர் செல்லத் துவங்கியுள்ளனர். எனவே, பூட்டி வைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளைத் திறக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்து உள்ளது.
இதற்காக, சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் குழாய்கள், கழிப்பறைகள், மின்விளக்கு, மின்விசிறி உள்ளிட்டவற்றை பராமரிக்க, பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவிற்கு, அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகளில் பொதுப்பணித் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.