வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அ.தி.மு.க., பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், ஜூன் 23ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. அடுத்த பொதுக்குழு 11ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்து, இடம் பார்த்தனர். இறுதியில் வானகரம் திருமண மண்டபத்திலேயே நடத்த, பழனிசாமி தரப்பினர் முடிவு செய்தனர். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பொதுக்குழு ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், நேற்று பூஜை போட்டு துவக்கி வைத்தார்.திருமண மண்டபம் உள்ளே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தாமல், மண்டபத்திற்கு வெளியே, வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், பெரிய அளவில் பந்தல் அமைத்து கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பந்தல் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தால், பன்னீர்செல்வத்திடம் உள்ள கட்சிப் பதவிகள் பறிக்கப்படும் என தெரிகிறது.பொதுச்செயலர் பதவியை உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பதவிக்கு போட்டி
பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால், அதை தனக்கு தர வேண்டும் என, மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.பொதுச்செயலர் பதவிக்கு அடுத்து பொருளாளர் பதவி அதிகாரம் மிகுந்தது என்பதாலும், அறக்கட்டளைகள் மற்றும் கட்சி வரவு செலவுகளை கவனிக்க வேண்டிய பணி என்பதாலும், அதற்கு போட்டி அதிகமாகி உள்ளது. இதை எப்படி சமாளிப்பது என, பழனிசாமி தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.