வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை சிறையில் கைதிகளை அடைக்கவும், அழைத்துச் செல்லவும் வரும் ஆயுதப்படை போலீசார் காத்திருப்பதைத் தவிர்க்க 'டோக்கன்' வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மதுரை சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தினமும் குறைந்தது 20 பேராவது விசாரணை கைதிகளாக அடைக்கப்படுகின்றனர். அதேசமயம் நீதிமன்ற விசாரணைக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
விசாரணை முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்து வந்து கைதிகளை விட்டுச்செல்ல போலீசாருக்கு இரவாகி விடுகிறது. ஒரு கைதியை சிறைக்குள் அனுமதிக்க குறைந்தது ஒருமணி நேரமாகிறது. இப்படி ஒவ்வொரு கைதியையும் உள்ளே அனுமதிக்க பல மணி நேரம் ஆகிறது. அதுவரை போலீசார் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதை தவிர்க்க டோக்கன் வசதி அறிமுகப்படுத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி போலீசார் வந்ததும் அவர்களுக்கு வரிசைப்படி டோக்கன் எண் வழங்கப்படும். அதனடிப்படையில் கைதிகளை அழைத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் கைதிகள், போலீசார் காத்திருப்பை தவிர்க்க மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை உதவி ஜெயிலர் ஒருவரை சிறை நிர்வாகம் நியமித்துள்ளது. இவர் கைதிகளை உடனுக்குடன் பரிசோதித்து, ஆவணங்களை ஆய்வு செய்து சிறைக்குள் அனுமதிப்பார்.

இதற்கிடையே உடல்நலம் பாதித்த கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை முடியும் வரை பாதுகாக்க மதுரை நகர் ஆயுதப்படை தயங்குவதால், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசாரையே வரவழைத்து அவர்களுடன் சிறை நிர்வாகம் கைதிகளை அனுப்பி வருகிறது.