வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை மாநகராட்சியில், மே மாதம் இரவு நேரத்தில், விவாதமின்றி நிறைவேற்றிய, 40க்கும் மேற்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய, அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. இதேபோல், கடந்த மே, 26ல் மாலை, 3:15 மணிக்கு துவங்கி இரவு, 9:15 மணி வரை கூட்டம் நடந்தது.மொத்தம், 83 தீர்மான பொருட்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 13 தீர்மானங்களே, மூன்று நாட்களுக்கு முன்னதாக, கவுன்சிலர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டன. 48 தீர்மானங்கள், 25ம் தேதி (புதன்கிழமை) இரவு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டன. மூன்று தீர்மானங்கள், மேஜை பொருளாக வைக்கப்பட்டன. மாமன்ற கூட்டம் முடியும் தருவாயில், 19 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் மேஜைக்கு கொண்டு சென்று கொடுக்கப்பட்டன.
இது, கவுன்சிலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.கடைசியாக கொடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன என்பதை படித்து கூட பார்க்காமல், ஒட்டுமொத்தமாக நிறைவேற்றப்படுவதாக, மேயர் கல்பனா அறிவித்தார். இச்சூழலில், அன்றைய கூட்டத்தில், 86 தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக, மாநகராட்சி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பல தீர்மானங்கள் விவாதம் செய்யாமல் நிறைவேற்றப்பட்டதாலும், பல கவுன்சிலர்களுக்கு அதன் விபரம் முழுமையாக தெரியாததாலும், அவற்றை ரத்து செய்ய, அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர், மாநகராட்சி கமிஷனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'கடந்த, மே, 26ல் நடந்த மாமன்ற கூட்டத்தில், 40க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் டேபிள் சப்ஜெக்ட்டாக எவ்வித விவாதமின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களும் இருக்கின்றன. அவற்றை ரத்து செய்து விட்டு, மீண்டும் மன்றத்துக்கு கொண்டு வந்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்' என கூறியுள்ளார். பார்ப்போம்... ரத்து செய்கிறார்களா என்று!