கோவை: தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில், தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளின் விலை முன்னறிவிப்பை வேளாண் பல்கலை வெளியிட்டது.விவசாயிகள் தங்கள் நடவு முடிவுகளை மேற்கொள்ள வேளாண்மைப் பல்கலை சார்பில், விலை முன்னறிவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் மொத்த தக்காளி உற்பத்தியில், தமிழகம், ஏழு சதவீதம் பங்களிக்கிறது. நாட்டில் தக்காளி, 20 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 203 லட்சம் டன் உற்பத்தியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கத்திரி, 18 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 127.68 லட்சம் டன் உற்பத்தியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்டை, 12.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு, 64.16 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த, 14 ஆண்டுகளாக நிலவிய விலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி, அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.20 - 23, நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ. 25 - 27, மற்றும் வெண்டையின் பண்ணை விலை ரூ.15 -18, வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.