மேலூர்: ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, பா.ஜ., சொல்லும் இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுவாரே தவிர எதிர்க்க கூடியவராக இருக்க மாட்டார்,' என மதுரை மாவட்டம் மேலவளவில் ஏழு பேரின் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: விடுதலை புலிகள் போன்ற இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு மாவட்டத்திற்கு 10 பேர் இருந்தால் போதும். தேர்தல் பாதை... திருடர் பாதை என்ற பிரசாரம் செய்த நான், இன்று அரசியலுக்கு வரக் காரணம் மேலவளவு முருகேசன் படுகொலை. பா.ஜ., நிறுத்திய ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு பழங்குடியினராக இருந்தாலும் பா.ஜ., கட்டுப்பாட்டில் உள்ளார்.
அப்துல்கலாம் பெயர் மட்டும் தான் இஸ்லாமியர். ஆனால் பா.ஜ., அரசு சொன்னதை மட்டும்தான் செய்தார். அவர் சனாதன சக்திகளுக்கு கட்டுப்பட்டவர். திரவுபதி முர்மு பழங்குடியினர் என்பதால் ஓட்டுப் போட ஆசை தான்; ஆனால் அவர் சர்க்கஸ்காரன் கையில் இருக்கும் புலி. பா.ஜ., சொல்லும் இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுவாரே தவிர, எதிர்க்க கூடியவராக இருக்க மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.