செய்திகள் சில வரிகளில் தர்மபுரி| Dinamalar

செய்திகள் சில வரிகளில் தர்மபுரி

Added : ஜூலை 01, 2022 | |
போர்வெல் ஆப்பரேட்டர் மாயம்கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 56; போர்வெல் ஆப்பரேட்டர். கடந்த நான்கு நாட்களுக்கு முன், தன் மகன் கேசவமூர்த்தியுடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு தன் சொந்த ஊரான, தளி அடுத்த சாத்தனுாருக்கு சென்றுள்ளார். கடந்த, 28ல் அவரது மகன் கேசவமூர்த்தி சாத்தனுார் சென்று, தந்தையை சமாதானப்படுத்தி உள்ளார்.

போர்வெல் ஆப்பரேட்டர் மாயம்
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 56; போர்வெல் ஆப்பரேட்டர். கடந்த நான்கு நாட்களுக்கு முன், தன் மகன் கேசவமூர்த்தியுடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு தன் சொந்த ஊரான, தளி அடுத்த சாத்தனுாருக்கு சென்றுள்ளார். கடந்த, 28ல் அவரது மகன் கேசவமூர்த்தி சாத்தனுார் சென்று, தந்தையை சமாதானப்படுத்தி உள்ளார். பின்னர் பெங்களூருக்கு செல்வதாக கூறிச்சென்ற கிருஷ்ணப்பா, மதக்கொண்டபள்ளி பஸ் ஸ்டாப் அருகில் மாயமானார். கேசவமூர்த்தி புகார்படி தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கடன் தொல்லை; டிரைவர் விபரீதம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பெரியமோட்டூரை சேர்ந்தவர் வாஜ்பாய், 26; டிராக்டர் டிரைவர். கடன் தொல்லையால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த, 28ல் இரவில், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கடந்த, 28ல் இரவில் கோனேகவுண்டனுார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோனேகவுண்டனுார் ஏரி அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், கிரானைட் கல் கடத்தியது தெரிந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தகவல்படி, மகாராஜகடை போலீசார் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
குட்கா விற்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஓசூர், கெலமங்கலம் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்கப்படுகிறதா என போலீசார் சோதனையிட்டனர். இதில், கிருஷ்ணகிரி, பானாக்கார தெரு பாபு, 56, ஓசூர் மூக்கண்டப்பள்ளி மாது, 52, பேடரப்பள்ளி ஜானு மகாபத்ரா, 38, கண்டகானப்பள்ளி நடராஜன், 32, கெலமங்கலம் வீரபத்திரன், 74, உட்பட ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து, 1,862 ரூபாய் மதிப்புள்ளான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிளஸ் 2 மாணவர் மாயம்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே, 17 வயது பிளஸ் 2 மாணவர், நடந்து முடிந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவர், நேற்று முன்தினம்
வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் புகார்படி, ஓசூர் ஹட்கோ போலீசார்
விசாரிக்கின்றனர்.
தர்மபுரியில் பரவலாக மழை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் மதியம், 2:00 மணி வரை வெயில் கொளுத்தி வந்த நிலையில், அதன் பின் வானம் மழை மேகத்துடன் காணப்பட்டது. மதியம், 2:30 மணியிலிருந்து, 2:45 மணி வரை தர்மபுரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
கிரேன் டயர்களை திருடியவர்கள் கைது
கிருஷ்ணகிரி: தளி அடுத்த டி.சூலகுண்டாவிலுள்ள கிரானைட் குவாரியில் சூப்பர்வைசராக பணிபுரிபவர் காவேரியப்பா, 63. கடந்த, 28ல் கம்பெனியை மூடிவிட்டு மறுநாள் காலை மீண்டும் பணிக்கு வந்தபோது கம்பெனியில் நிறுத்தியிருந்த கிரேனில், இரண்டு டயர்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து தளி போலீசில் அவர் அளித்த புகார்படி, தேன்கனிக்கோட்டை அடுத்த என்.கொத்துாரை சேர்ந்த பிரகாஷ், 27, பிரபாகர், 26, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கந்து வட்டி புகார்; தம்பதி கைது
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கோடிப்பதி கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா, 50; இவர் கடந்த, 2018-19ல் அதே பகுதியை சேர்ந்த இளவரசன், 38, என்பவரிடம் தன் தேவைக்காக 1.10 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பணத்தை திருப்பி தராத நிலையில் இளவரசன், அவர் மனைவி சித்ரா, 32, ஆகியோர், பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால், அம்பிகா, கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக இளவரசன், சித்ரா மீது மத்துார் போலீசில் கடந்த, 22ல் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இளவரசன், சித்ராவை போலீசார் கைது செய்தனர்.
மின் தகன மயானம்: பா.ஜ., மனு
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையில், மின் தகன மயானம் அமைக்கக்கோரி, பா.ஜ., நகர தலைவர் வெங்கட் தலைமையில் தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., செயல் அலுவலர் மனோகரிடம் மனு அளித்தனர். அப்போது, நகர பொதுச்செயலாளர்கள் பிரகாஷ், விஜி, நகர செயலாளர்கள் சேகர், பாலா, பாலாஜி, துணை தலைவர்கள், மாவட்ட செயலாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி: ஓசூர், ஆர்.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.ஐ.,ராமமூர்த்தி, மற்றும் போலீசார் மாணவர்களுக்கு சாலை விதிகள் பற்றியும், மாணவர்கள் வாகனங்களை இயக்க கூடாது என்பது குறித்தும் விளக்கினர்.
திட்டப்பணிகளை எம்.எல்.ஏ., துவக்கம்
கிருஷ்ணகிரி: ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பேரிகை ஆதிதிராவிடர் காலனியில் ஒன்றிய பொதுநிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை, ஓசூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் நாகேஷ், பஞ்., தலைவர் பிரவீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
கடைகளுக்கு அபராதம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் தலைமையில், ஆய்வாளர்கள் உதயகுமார், சந்திரகுமார், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் நேற்று, சப் ஜெயில் சாலையில் தின்பண்டங்கள் விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர். அதில், மக்காத பிளாஸ்டிக் கவர்கள் விற்றதை அறிந்து, 3 கடைகாரர்களுக்கு, 7,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கடைகள்
ரூ.16.64 லட்சத்துக்கு ஏலம்
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆறு கடைகள், தென்னை, புளியமரங்கள் மகசூல் உரிமம், புஞ்சை நிலம், 1.20 ஏக்கர் ஆகியவற்றிற்கு நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் ஏலம் நடந்தது. தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 16 லட்சத்து, 64 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு கடைகள் ஏலம் போனது. கோவில் செயல் அலுவலர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்சோவில் வாலிபர் கைது
ஊத்தங்கரை: திப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 29. இவர், 10ம் வகுப்பு படித்த, 14 வயது மாணவியை கடத்திச்சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் தந்தை புகார்படி, ஊத்தங்கரை போலீசார் போக்சோ
சட்டத்தில், ராஜேந்திரனை கைது செய்தனர்.
திருட்டை தடுக்கக்கோரி புகார்
அரூர்: அரூர் முருகர் கோவில் தெருவில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இங்குள்ள வீடுகளில் பொருட்கள், கோழி உள்ளிட்டவை திருடு போனது. தொடர் திருட்டை தடுக்கும் வகையில், முருகர் கோவில் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதுடன், இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடக்கோரி, நேற்று அப்பகுதி மக்கள், அரூர் போலீசில் புகார் மனு அளித்தனர்.
பள்ளியில் பேச்சு, கட்டுரை போட்டி
அரூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், 'தமிழ்நாடு உருவான வரலாறு' என்ற தலைப்பில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நேற்று நடந்தது. தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் அரிசி விற்பனை அமோகமாக நடக்கிறது. இங்குள்ளோர் மக்களிடம் ரேஷன் அரிசியை மாதமொரு முறை டூவீலரில் வரும் நபர்கள் கிலோ, 10 முதல், 15 ரூபாய் வரை விலை பேசி வாங்கிச் செல்கின்றனர். அதை மொத்தமாக கர்நாடகா மாநிலத்தில் விற்பனை செய்கின்றனர். இதுபோல், 50க்கும் மேற்பட்டோர் ரேஷன் அரிசி கடத்துகின்றனர். இவர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.1.16 கோடி திட்டபணிக்கு பூமி பூஜை
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்துார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில் பல்நோக்கு மையம் கட்டடம், தார்ச்சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாலை பலப்படுத்துதல் பணி, சாலை பலப்படுத்துதல் என, ஒரு கோடியே, 13 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
மயிலாடும்பாறை அகழாய்வு
பணிகள்: கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டார். இந்த அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் மற்றும் வணிகக்குழு கல்வெட்டுகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது, தொல்லியல் துறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், தொல்லியல் துறை அகழாய்வு பொருளாளர் பரந்தாமன், பர்கூர் தாசில்தார் பன்னீர்செல்வி, பஞ்., தலைவர் ரீனா கிரிதரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X