தி.மு.க., உட்கட்சி தேர்தலில் தற்போது ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மேற்கு மாவட்டம், குமாரப்பாளையம் தொகுதியில் அடங்கிய பள்ளிப்பாளையம் ஒன்றிய செயலர் தேர்தலில் போட்டியிட்ட யுவராஜ் மீது குமாரப்பாளையம் தொகுதி தி.மு.க., நிர்வாகி வெங்கடாசலம், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் நாமக்கல் மேற்கு மாவட்டம், குமாரபாளையம் தொகுதி வேட்பாளராக தங்களால் அறிவிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிட்டேன்.
எனக்கு மாவட்ட செயலர் மூர்த்தியும், பள்ளிப்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் சேர்ந்து எனக்கு சரிவர தேர்தல் பணி செய்யவில்லை.
ஒன்றிய நகர செயலர்களை அழைத்தும் தேர்தல் பணி செய்யும்படி மாவட்ட செயலர் கூறவில்லை.இதை கேள்விப்பட்டு சபரீசன், யுவராஜை அழைத்து தேர்தல் வேலை சரியாக செய்யவில்லை என்ற புகா் வருகிறது.ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என எச்சரித்தும் அவர் பேச்சை கேட்காமல் தங்கமணிக்கு ஆதரவாக யுவராஜா செயல்பட்டார்.
இந்நிலையில் ஒன்றிய செயலர் தேர்தலில் போட்டியிடும் யுவராஜ் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என, தேர்தல் பொறுப்பாளர் சுகவனத்திடம் முறையிட்டேன்.
அதற்கு யுவராஜ், 'யாரை வேண்டுமானாலும் தலைமை அறிவித்தால் நான் வேலை செய்ய வேண்டுமா? நான் அப்படி எல்லாம் வேலை செய்ய முடியாது' என கூறினார், அங்கிருந்த நானும், கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தோம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கடாசலம் கூறியுள்ளார்.
இந்த புகார் மனு மீது துணைப் பொதுச் செயலர் அ.ராஜா விசாரணை நடத்தினார். அப்போது தான், கட்சி தலைமையின் குடும்பத்தினரை பற்றி யுவராஜா விமர்சித்த புகார் ஆதராப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் எப்படி அவரை மீண்டும் ஒன்றிய செயலர் தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என, மாவட்டச் செயலர் மூர்த்தியை அ.ராஜா கண்டித்துள்ளார்.
யுவராஜ் போட்டியிட்ட தேர்தலை உடனே நிறுத்தி வைக்கும்படியும், ஒன்றிய செயலர் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும்படியும் தேர்தல் பொறுப்பாளருக்கு அ.ராஜா உத்தரவிட்டுள்ளார்.