சிதம்பரம்: 'அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பழனிசாமி நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்' என, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன், அருண்மொழிதேவன் தெரிவித்தனர்.
இது குறித்து சிதம்பரத்தில் அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'அ.தி.மு.க., வின் ஒற்றைத் தலைமையாக முன்னாள் முதல்வர் பழனிசாமியை ஒன்னரை கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பன்னீர்செல்வம் தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழ்வது, அவரது மகன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க., ஆட்சி சிறப்பாக உள்ளது என, கூறுவதை ஏற்க முடியாது. 64 எம்.எல்.ஏ.,க்களில் 63 பேர் பழனிசாமியை ஆதரிக்கின்றனர். 2,666 பொதுக் குழு உறுப்பினர்களில் 2,432 பேரும், 75ல் 70 மாவட்ட செயலாளர்களும் பழனிச்சாமி பொதுச் செயலாளராக வர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவில் பழனிச்சாமி பொதுச் செயலாளர் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவார்' என்றார்.
மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறுகையில்,' உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி 20ம் தேதி மனுத் தாக்கல் துவங்கியது. இன்று (நேற்று) மாலை 3 மணியுடன் வேட்பு மனு வாபஸ் முடிவடைந்தது. அ.தி.மு.க.,வில் வழக்கமாக வேட்புமனு தாக்கலுக்கு முன்பே, வேட்பாளர் தேர்வு முடிந்ததும் ஏ., பி., பார்ம் வழங்கப்படும். தற்போது வேட்பாளர் தேர்வே நடைபெறாதபோது கட்சி சின்னத்தை யாருக்கு கொடுப்பது.உட்கட்சியில் பொய்யான தகவல் தெரிவித்து தொண்டர்கள் நம்புவார்கள் என, கடிதம் எழுதி பன்னீர்செல்வம் நாடகமாடுகிறார்.
இவரது நாடகத்தை தொண்டர்கள் நம்ப தயாராக இல்லை. தி.மு.க., - பா.ஜ.,- சசிகலா - தினகரன் ஆகியோர் வேண்டும் என்று நிலைப்பாட்டோடு இருக்கும் அவரை தொண்டர்கள் எப்படி ஏற்பர். அ.தி.மு.க.,வில் இனி ஒற்றைத் தலைமை தான். அது தி.மு.க.,வை எதிர்க்கும் பழனிச்சாமி தான். இதனை வரும் 11ம் தேதி பொதுக்குழு தீர்மானிக்கும்.சினிமா பாணியில் சொல்ல வேண்டுமானால் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் டிக்கெட் வாங்கி கொடுத்தும் ஓடவில்லை. ஆனால் கமல்ஹாசன் நடித்த விக்ரம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. பன்னீர்செல்வம் ஓடாத படம் போன்றவர். ஆனால் விக்ரம் படம் போல பழனிச்சாமிக்கு ஏகோபித்த ஆதரவு இருக்கிறது' என்றார்.